• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஆகஸ்ட் 15″ல் ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா

BySeenu

Aug 11, 2024

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய முத்துக்குமார்..,
“ஈஷா மண் காப்போம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது.இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளை தொழிலதிபர்களாக உருவாக்கும் பொருட்டு இந்தப் பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது.விவசாயம் சார்ந்து வெற்றிகரமாக நடைபெறக் கூடிய தொழில்கள் குறித்த விழிப்புணர்வையும், அது சார்ந்த வழிகாட்டுதல்களையும் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்கும் நோக்கத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா – கனவு மெய்ப்பட வேண்டும்’ எனும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி புதிய வேளாண் தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதனை பிராண்டிங் செய்வது குறித்த யுக்திகள், பொருட்களை பேக்கிங் செய்வதில் உள்ள தொழில்நுட்பங்கள், எவ்வாறு சந்தைப்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், அரியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.மேலும் விவசாயம் சார்ந்து தொழில் துவங்க அரசு சார்பில் என்ன மாதிரியான உதவித் திட்டங்கள் இருக்கின்றது என்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.குறிப்பாக வேளாண் வணிக வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான ஞானசம்பந்தம் பேச உள்ளார்.சிறுதானியங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் பிவிஆர் பூட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சுபத்ரா, இதுவரை 17,000 தொழில் முனைவோர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள S.K. பாபு, ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் விற்பனையில் சாதித்த முருங்கை விவசாயி பொன்னரசி, தனது 50-வது வயதில் தொழில் துவங்கி மூலிகை மதிப்பு கூட்டல் தொழிலில் வென்ற விஜயா மகாதேவன் உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களும், நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனுள்ள தலைப்புகளில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.