இன்று நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற அந்த கப்பலில் பயணக் கட்டணமாக ரூ. 6,500 நிர்ணயம் செய்யப்பட்டது. 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து பயணிகளிடம் ரூ.7,670 வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில் இருந்தே பயணிகளை கவராததால் அதன் பின்னர், 75 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது.
இதனால் ஜிஎஸ்டி உட்பட பயண கட்டணம் ரூ. 2,375 ஆக நிணயம் செய்யப்பட்டது. ஆனாலும், 2ம் நாளில் பயணம் செய்ய 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்தனர். இதனால் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கப்பல் சேவை வாரத்துக்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. எனினும் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் கப்பல் போக்குவரத்து கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
இயற்கை சீற்றம் குறைந்தவுடன் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஜனவரி மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாகப்பட்டினம் – இலங்கை இடையே குறைந்த கட்டணத்துடன், ஒரு நபர் 110 கிலோ வரையிலான எடையுடன் பொருட்களை எடுத்து செல்லும் வசதி கொண்ட கப்பல் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது.
தற்போது கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வராததால், போக்குவரத்து 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, இன்று தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை தற்போது 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர். அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் மீண்டும் தள்ளிவைக்கப் பட்டுள்ளதாகவும், பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19ம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து
