• Thu. May 9th, 2024

கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளியை பிடித்த பின்பு..,மாநகர காவல் துணை ஆணையாளர் செய்தியாளர் சந்திப்பு..!

BySeenu

Dec 12, 2023

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையாளர் சந்தீஷ்..,
கோவையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை தேடும் பணி நடந்து வந்தது. கோவை நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையனை தேடும் பணி வேகப்படுத்தப்பட்டது. இதில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் தங்கி இருந்த விஜயின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த மூன்று கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் தர்மபுரியில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகா ராணி கைது செய்யப்பட்டு, அவர் மறைத்து வைத்திருந்த 1.2 கிலோ நகைகள் மீட்கப்பட்டது.
தொடர்ச்சியாக விஜய்யின் நடமாட்டத்தை கண்காணித்த தனிப்படையினர், ஆந்திர மாநிலம் காலகஸ்திலிருந்து சென்னைக்கு வருவதை கண்டுபிடித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம்கார்டு வாங்குவதற்காக முயற்சி செய்த விஜய் தனிப்படையினர் கைது செய்ததாக தெரிவித்தார். கடந்த 14 நாட்களாக விஜயின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததாகவும், ஆனால் அவனிடம் செல்போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாததால் தேடுவதில் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
எனினும் கைரேகை பதிவுகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விஜயின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக கூறினார்.விஜய் பிடிக்கும் பணியில் 48 காவலர்கள் அடங்கிய ஐந்து தனி படைகள் இரவு பகலாக ஈடுபட்டதாக தெரிவித்தார்.
எந்தவித துணையும் இன்றி தற்செயலாக நகைக்கடையில் புகுந்து விஜய் கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.கோவை மாநகரில் அதிக மதிப்புடைய பொருள்களை விற்பனை செய்யும் நகை கடைகள், செல்போன் கடைகள், கைக்கடிகார கடைகள் ஆகிய உரிமையாளருடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
பழைய கேமராக்களை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கேமராக்கள் பொருத்தவும், சென்சார் வசதியுடன் கூடிய வைப்ரேஷன் மற்றும் மோசன் சென்சார் வசதியுடன் கூடிய கேமராக்களையும் பொருத்தமும் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
மொத்தம் 5.15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் 5.12 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *