• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஈஷா யோக மையத்தில் ஆதியோகி ரத யாத்திரை..!

ByKalamegam Viswanathan

Dec 26, 2024

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு…

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (26/12/2024) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது, “ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதம் சென்னையில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் வலம் வர இருக்கிறது.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

இந்த ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்பணிக்கலாம்.

தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு ஆதியோகி ரதம் இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் வருகை தர உள்ளது. சென்னையை பொருத்த வரையில் வரும் டிச 30-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது.

ஆதியோகி ரதங்கள் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன.

இதனுடன் ‘சிவ யாத்திரை’ எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். இதனுடன் 63 நாயன்மார்களின் திருவுருவங்களை தாங்கிய ஒரு தேரினையும் அடியார்கள் பாத யாத்திரையாக இழுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் நேரலை செய்யப்பட உள்ள 50 இடங்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அவருடன் தன்னார்வலர்கள் சீனிவாசன், இந்து ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆதியோகி ரத யாத்திரை தொடக்க விழா ஒன்றில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் அவர்கள் பேசுகையில், “மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறோம். இவ்விழா நம் திருக்கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை மக்களின் விழாவாக, மக்களின் வழிபாட்டு நிகழ்வாக மாற்றிய பெருமை ஈஷா யோக மையத்தையே சாரும். ஈஷா மையத்தின் பணிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறது. ஈஷாவின் சமயப் பணிகளும் சமுதாயப் பணிகளும் மேலும் சிறந்த விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனக் கூறினார்.