பேரையூரில் ஓய்வூதிய பணபலன்களை வழங்க ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர், அலுவலக உதவியாளர் என இருவரை கைது செய்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த லதா என்பவர் சிலைமலைபட்டி உள்ள அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வுபெற்றுள்ளார்.
ஓய்வு பெற்ற பின், பேரையூர் கருவூல அலுவலகத்தில் நிலுவையில் உள்ள தனது சேம நல நிதி மற்றும் ஓய்வூதிய பணபலன்கள் பெற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் பழனிகுமாரை அணுகியுள்ளார்.

இந்த பணபலன்களை வழங்க 11 ஆயிரம் லஞ்சமாக வழங்குமாறு லதாவிடம் கருவூல அலுவலர் கேட்ட சூழலில், இது குறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், ரசாயணம் தடவிய 11 ஆயிரம் ரூபாயை இன்று கருவூல அலுவலரிடம் லதா வழங்கிய போது மறைந்திருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் பேரையூர் கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் பழனிக்குமார், அலுவலக உதவியாளர் லெட்சுமி என்ற இருவரையும் கையும், களவுமாக பிடித்து 11 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் பழனிக்குமார், அலுவலக உதவியாளர் லெட்சுமி என்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ததுடன் இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.