• Mon. Sep 9th, 2024

உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பட்டாசு ஆலைகளில் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ByA.Tamilselvan

Apr 21, 2022

பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்யும் நோக்கோடு பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் பட்டாசுத் தொழிற்சாலைகளின் மீது கவனம் செலுத்தாதன் காரணமாக அங்கே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் உள்ள ஆர்கேவிஎம் பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடி பட்டி கிராமத்தில் உள்ள சோலை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில்
ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது என்ற வரிசையில் தற்போது சிவகாசி அருகே ஜோதி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்தசாமி என்கிற தொழிலாளி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது ஆற்றொணாத் துயரத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாரனேரி பர்மா காலனியில் வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவருக்கு சொந்தமான ஜோதி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தில் ஓர் அறையில் அரவிந்தசாமி என்பவர் நேற்று வெடியில் மருந்து திணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது உராய்வு ஏற்பட்டு வெடித்ததில் அரவிந்தசாமி உயிரிழந்தார் என்றும், அந்த அறை தரைமட்டமாகிவிட்டது என்றும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இவ்வாறு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று பழமொழிக்கேற்ப, இழப்பீடை வழங்குவதை விட தொழிலாளர்களின் உயிரைக் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பட்டாசுத் தொழிலில் பணிபுரிவோர் எதிர்பார்க்கின்றனர். பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் மருந்துக் கலவையின்போது தான் ஏற்படுகிறது.

இதுபோன்ற விபத்தினைத் தடுக்க தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை சென்று, மருந்துக் கலவை மேற்கொள்ளும் பணி தகுதி வாய்ந்தவர் முன்னிலையில் நடைபெறுகிறதா என்பதையும், அந்தப் பணியை செய்யும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடை பிடிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து, பட்டாசு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு முறையாக செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதுகுறித்து நான் பல முறை அறிக்கை வெளியிட்டும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *