வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் ஐந்தாயிரம் பேர் 50 நிமிடத்தில் 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
வடக்கன்குளத்தில் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி, எஸ்.ஏ.வி .சகாயத்தாய் பெண்கள் கலைக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன.

சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் பூமியை பசுமையாக்கும் முயற்சியில் விதைப்பந்துகளை விதைப்பதை, சமூக இயக்கமாக உருவாக்கி ஒரு கோடி விதைப்பந்துகள் என்ற இலக்குடன் இயங்கி வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.கல்வி குழுமங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் விதைப்பந்துகளின் அவசியம் குறித்தும், விதைப்பந்துகள் தயாரிக்கும் விதம் குறித்தும், விளக்கி கூறினார். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் திருமாறன் துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் திவாகரன் பேசும் பொழுது, மரங்கள் மனித வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தது. அதை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்.? என்பதை விளக்கியதுடன் மாணவ பருவத்திலேயே, மாணவர்கள் இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார். மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இயற்கையை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளியின் ப்ரீகேஜி மாணவ, மாணவியர் முதற்கொண்டு கல்லூரி மாணவியர் வரை ஆர்வமுடன் இந்த விதைப்பந்து நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். விதைப்பந்து தயாரிப்பதற்கு சின்னஞ்சிறிய மாணவிகள், மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்து வேப்பங்கொட்டை, புளியங்கொட்டை, பலாக்கொட்டை, சப்போட்டா பழ விதை , கொய்யா விதை போன்றவற்றை ஆர்வமாக கொண்டு வந்திருந்தனர்.

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மேலும் பல விதைகளை ஆர்வமுடன் சேகரித்து கொண்டு வந்திருந்தனர். விதைப்பந்து நிகழ்வு சிறப்பாக நடக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. 5 ஆயிரம் மாணவர்கள் 50 நிமிடத்தில், சுமார் 5 லட்சம் விதை பந்துகளை உருவாக்கி சாதனை புரிந்தனர். மாணவர்களால் உருவாக்கப்பட்ட விதைப்பந்துகள் தேவையான அளவு உலரவிட்ட பிறகு தகுந்த இடங்களில் தூவப்பட உள்ளன.
நிகழ்வில் பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், செல்வகுமாரி திவாகரன், மெட்ரிக் பள்ளி முதல்வர் சுடலையாண்டி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் பெஞ்சமின், சகாயத்தாய் பெண்கள் கல்லூரி முதல்வர் சாந்தி, செயற்குழு உறுப்பினர் பிந்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் கூடி விதை தூவிய காட்சி
மரங்களின் வளர்ச்சிக்கு ஊற்றிய தண்ணீர்.