தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மண், மணல், விவசாய நிலங்களில் கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களில் ஜேசிபி, ஹிட்டாச்சி, உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி மண் மற்றும் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
விவசாய நிலங்களில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதால் அருகே உள்ள விவசாயக் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கிராமசாலைகளில் டிப்பர் லாரி கனரக வாகனங்களில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் ஏற்றி செல்லும் பொழுது கிராம சாலைகள் முழுவதும் சேதமடைந்து வருகிறது.
உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளையடிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.