சர்வதேச பள்ளிகளுக்கான கேம்பிரிட்ஜ் கணித தேர்வில் கோவை சி.எஸ். அகாடமி மாணவர்கள் உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.
கோவையில் உள்ள சி.எஸ். அகாடமியின் மாணவர்களான ஷிவி விக்ரம் மற்றும் பிரணவ் இளங்கோ ஆகியோர் 2023-24 ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் சர்வதேச கணிதத் தேர்வில் உலகளவில் சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், இந்த சாதனை குறித்த செய்தியாளர் சந்திப்பு திருச்சி சாலையில் உள்ள அப்பள்ளியின் கிளையில் நடைபெற்றது.
மாணவி ஷிவி விக்ரம் சர்வதேச பள்ளி பாடத்திட்டத்தில் ஏ.எஸ். என்கிற உயர் நிலையில் பயில்கிறார். இவர் 2023-24 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். இந்தியாவில் வெறும் ஐந்தே மாணவர்கள் தான் உலக அளவில் கணிதத்தில் முன்னிலை பெற்றுள்ளனர். அதில் ஷிவியும் ஒருவர். அதே போல, ஐ.ஜி.சி.எஸ்.இ. எனும் நிலையில் பயிலும் மாணவர் பிரணவ் இளங்கோவும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் முன்னிலை பெற்ற வெறும் 30 பேர்களில் ஒருவராக உள்ளார்.
இந்த இமாலய சாதனை படைத்த மாணவர்களையும், அவர்கள் இந்த உயரத்தை அடைய பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளித் தலைவர் சோனி தாமஸ் மற்றும் முதல்வர் சாந்தப்ரியா முன்னிலையில் அகாடமியின் இயக்குநர் டாக்டர் விக்ரம் ராமகிருஷ்ணன் பாராட்டி கௌரவித்தார்.
