சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆப்ரேட்டர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மணலி பல்ஜி பாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்து மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மூலம் பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், ஆலையில் இயந்திரத்தின் அருகே இருந்த கேஸ் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாஸ்கரனை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதனிடையே குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகையால் பயோ கேஸ் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.