சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் போதைப் பொருள் கடத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது என ஏராளமான குற்ற நடவடிக்கைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.அந்தவகையில், தலைநகர் சென்னையில் நடந்த சம்பவம் மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய, சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்..
எனவே, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் இப்போதும் ஒரு கைது நடவடிக்கை பல்லாவரத்தில் நடந்து அதிர்ச்சியை தந்து வருகிறது.
திரிசூலம் ரயில்வே கேட் அருகே பல்லாவரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர், கையில் பெரிய பையுடன் இங்குமங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்..

இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால், முன்னுக்குப்பின் முரணாக அவர் சொல்லவும், போலீசாருக்கு கூடுதல் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அந்த பெண்ணிடமிருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து, பல்லாவரம் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்..
அந்த பெண் திரிபுரா மாநிலம், உதைப்பூர் பகுதியை சேர்ந்தவர். பெயர் பாயல்தாஸ் .. 25 வயதாகிறது. இவருக்கு கல்யாணமாகிவிட்டது.. ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காகவே, இப்படி கஞ்சா விற்பனையில் ஈடுபட துவங்கினார்.

திரிபுராவிலிருந்து மாதத்திற்கு 4 முறை சென்னைக்கு ரயிலில் வருவது இவரது வழக்கமாகும். கையோடு 5 கிலோ கஞ்சாவையும் கொண்டுவந்துவிடுவார். சென்னை புறநகர் பகுதியில், அந்த கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்துவிடுவார். பிறகு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் நண்பர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்து வருவார்.
அதுமட்டுமல்ல, கஞ்சாவை விற்பனை செய்வதற்காகவே சோஷியல் மீடியா பக்கத்தில், தன்னுடைய பெயரில் ஐடி ஒன்றை துவங்கியிருக்கிறார். அதில், தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களையே பதிவிட்டுள்ளார். திருமணமானதை மறைத்துவிட்டு, கல்லூரி மாணவிபோல காட்டிக் கொண்டு வந்துள்ளார்.
இவரது போட்டோ, பதிவுகளை பார்த்த பல இளைஞர்கள், அவருக்கு ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறார்கள். உடனே அந்த இளைஞர்களின் செல்போன் நம்பரை கேட்டு வாங்கி, அவர்களிடம் நட்பு கொள்ள துவங்கியிருக்கிறார். பிறகு மெல்ல மெல்ல, தான் கடத்தி வந்த கஞ்சாவை, அவர்களுக்கு விற்றுவிடுவாராம்.
ஒரு கிலோ கஞ்சாவை திரிபுராவில் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை, இங்கே சென்னையில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்று வந்திருக்கிறார் இளம்பெண். இதனால் கை நிறைய பணம் கொட்டியிருக்கிறது. இதனால், அடுத்தடுத்த கஞ்சா வியாபாரத்தில் மும்முரமாகி வந்துள்ளார். இப்படியே தொடர்ந்து 3 வருடங்களாக கஞ்சா விற்று வந்துள்ளார். இளம்பெண் என்பதால் போலீசாருக்கு தன் மீது சந்தேகம் வராது என்றும் உறுதியாக நம்பியிருக்கிறார்.
இதில் ஹைலைட் என்னவென்றால், ரயிலில் கஞ்சாவை கடத்தி வரும் பாயல், அந்த கஞ்சாவை சென்னையில் விற்றதுமே, மீண்டும் திரிபுராவுக்கு ஃப்ளைட்டில்தான் செல்வாராம். கையில் லட்சக்கணக்கில் பணம் புழங்கியதால், காஸ்ட்லி டிரஸ், செருப்பு, நகைகளை அணிந்து கொண்டு, விதவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வாராம். இந்த ரீல்ஸ்களையெல்லாம் நம்முடைய போலீசார் ஆய்வு செய்திருக்கிறார்கள். இப்போது இளம்பெண் புழலில் உள்ளார்.
சமீபகாலமாகவே சென்னையில் கஞ்சா புழக்கம் அதிகமாகி கொண்டிருக்கிறது. சினிமா துறைகளில் அதிக அளவு புழங்குவதாக சொல்லப்படுகிறது. இதற்கெனவே, ஏஜென்ட்கள், புரோக்கர்கள் இருக்கிறார்களாம். அதேபோல, சென்னை புறநகர்களில் உள்ள ஐடி கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களை குறி வைத்தும் கஞ்சா விற்பனை நடப்பதாக ஏற்கனவே புகார்கள் வந்தன. அந்தவகையில்தான் தற்போது பல்லாவரத்தில் இளம்பெண்ணும் சிக்கியிருக்கிறார்.