• Sat. May 4th, 2024

காதலித்து மணமுடித்து குடும்பம் நடத்திய கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை

ByI.Sekar

Apr 3, 2024

மணமகன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் என்பவரின் 19 வயது மகள் ஹேமலதா. ஜோதிடர் சுரேஷ் தனது உறவினரான போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பெங்களூர் இஸ்ரோ மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான மணிவாசகத்தின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது மணிவாசகத்தின் மகன் ககன் ஜெயராம் (எ)சந்துரு என்பவருக்கும் ஹேமலதாவிற்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து பல இடங்களில் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்த காதலர்கள் கடந்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில், பதிவு செய்யாமல் தாங்களே தாலிகட்டி மாலைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இருவீட்டாரின் சம்மதம் இல்லாமல் தாங்களே திருமணம் செய்துகொண்டு எங்கு செல்வது என தெரியாமல் தவித்த அவர்களுக்கு, பெரும் செல்வந்தரான மணமகனின் தாத்தா சேதுராமன் அடைக்கலம் கொடுத்தார்.

தாத்தா சேதுராமனின் வீட்டில் தங்கி இருந்த புதிய மணமக்கள் ஒன்றாக சில நாட்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இருவீட்டாரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தாத்தா சேதுராமன் அதற்கு வழி ஏற்படுத்தும் வகையில் முதலில் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு மணமக்களை அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.

இதையடுத்து கோம்பை காவல் நிலைய எல்லைக்குள் திருமணம் நடைபெற்றுள்ளதால் அங்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து கோம்பை காவல் நிலையத்தில் மணமக்கள் தஞ்சம் அடைந்தனர்.

மணமகளுக்கு 19 வயதும் மணமகனுக்கு 20 வயதும் ஆனதாலும் 21 வயது பூர்த்தி அடையாததாலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மணமக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சென்ற மணமக்கள் மீண்டும் கோம்பை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பின்பு அவர்களது பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மணமகனுக்கு உரிய வயதான 21 வயது பூர்த்தியடையாதால் மணமக்கள் இருவரையும் பெற்றோருடன் அனுப்பி வைப்பது என்றும், மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் முறைப்படி திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தொலைபேசியில் தினமும் பேசி ஹேமலதா உடன் தொடர்பில் இருந்து வந்த சந்துரு திடீரென தொடர்பை துண்டித்துக் கொண்டு தலைமறைவானார். சந்துருவின் பெற்றோர்கள் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறி, கோம்பை காவல் நிலையத்தில் ஹேமலதா புகார் செய்ததை அடுத்து சிஎஸ்ஆர் போடப்பட்டு ரசீதும் வழங்கப்பட்டது.

இதையடுத்து நடவடிக்கை தாமதமானதால், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் சந்துரு மாயமானது குறித்து புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா போடி அருகே உள்ள சிந்தலைச்சேரியில் உள்ள தனது வீட்டிலேயே நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு, தலைமறைவான சந்துருவை கூட்டிச்சென்று பெங்களூரில் மறைத்து வைத்துள்ள இஸ்ரோவில் பணிபுரையும் அவரது தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் கூறி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஹேமலதாவின் குடும்பத்தினர்.

இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *