நெல்லையில் பெண் ஒருவர் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை 21 முறை தூக்கி அசத்தி சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே உள்ள வடலிவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரை அந்த கிராமத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரோஸ்மியாபுரத்தை சார்ந்த பந்தல் போடும் தொழிலாளியான லட்சுமணன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ராஜேஸ்வரிக்கு இப்போது 41 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகள், 11 ஆம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். ராஜகுமாரி கடந்த ஏழு வருடங்களாக இளவட்ட கல் தூக்கி அனைவரையும் அசர வைத்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக தென் மாவட்ட கிராமப்புறங்களில் வீர விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் பொங்கல் பண்டிகை போன்ற நன்னாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் ஆண்கள் தங்களுடைய திறமை மற்றும் வலிமையை வெளிக்காட்டும் விதமாக இளவட்ட கல் தூக்கி அசத்துவர்கள். அப்போது அதை பலரும் பிரமிப்பாக பார்ப்பார்கள். ஆனால், வெயிட்டான அந்த இளவட்டக் கல்லை பெண்களாலும் தூக்கி அசத்த முடியும் என்று ராஜகுமாரி போன்ற ஒரு சிலர் நிரூபித்து இருக்கிறார்கள்.
இளவட்டக் கல் வட்ட வடிவத்தில் கையில் எளிதாக பிடிபடாத வகையில் இருக்கும். அதை லாவகமாக தூக்கி தோளுக்கு பின்னாடி தூக்கி போடுவது மிகவும் கஷ்டமான விஷயம். கொஞ்சம் தப்பினாலும் கழுத்து பகுதி உடைந்துவிடும். தூக்கும் போது சரியாக, கவனமாக தூக்கவில்லை என்றால் காலில் விழுந்தாலும் கால் அடிபட்டு விடும்.
இளவட்டக் கல் 25 கிலோவில் இருந்து 70 கிலோ வரைக்கும் இருக்கும். இதில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு 55 கிலோ கல்லை, 27 முறை தூக்கி போட்டு ராஜகுமாரி அசத்தியிருக்கிறார். அவர்தான் முதல் பரிசு பெற்று இருக்கிறார். இவருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்த போது, அவருடைய வார்த்தைகள் கேட்பவர்களுக்கு மன தைரியமும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ராஜேஸ்வரி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அவருடைய ஊரில் பொங்கல் விழா நடைபெறும் போது இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஆண்கள் மட்டும் தூக்குகிறார்களே நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று தூக்கி இருக்கிறார். முதல் முறையே 55 கிலோ கல்லை ஏழு முறை தூக்கி இருக்கிறார். அவருக்கு அப்போது ராதாபுரம் எம்எல்ஏவாக இருந்த இன்பத்துரை 5000 பரிசு வழங்கியிருக்கிறார்.
இதுதான் இவர் வாங்கிய முதல் பரிசு. அதற்கு பிறகு வருடா வருடம் இதில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த ஏழு வருடங்களாக இவர் கலந்து கொண்டு வரும் நிலையில் அதிகமுறை இவர் முதல் பரிசு தான் வாங்கி இருக்கிறார். குடும்பத்தினர் சப்போர்ட் எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு அவர் குடும்பத்தினர் நீ தாராளமா பண்ணு என்று சொல்கின்றனர். ஆனாலும் ஆரம்பத்தில் கர்ப்பப்பை இறங்கிவிடும் என்று ஊர்காரங்க எல்லாரும் பயமுறுத்துவதை கேட்டு எங்க அம்மாவும் பயப்பட்டாங்க. அதற்குப் பிறகு என்னுடைய தைரியத்தை பார்த்து அம்மாவும் சரி நீ பண்ணு என்று சொல்றாங்க. இப்போ 41 வயதாகிறது ஆனாலும் என்னால் தூக்க முடியும். எனக்கு இதுவரைக்கும் கர்ப்பப்பை பிரச்சனை, வயிறு வலி பிரச்சனை எதுவும் வந்தது கிடையாது. எங்க ஊர்காரங்க நல்லா சப்போர்ட் கொடுப்பாங்க.
ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் பத்து நாட்களுக்கு முன்பே கல் தூக்குவதற்கு பயிற்சி எடுக்க தொடங்கி விடுவோம். அதற்காக எங்க ஊரில் சிலர் உதவி செய்றாங்க. நாங்க எப்படியாவது ஜெயிக்கணும், கடந்த முறையை விட இந்த முறை அதிக முறை கல்தூக்கி போடணும் என்று எங்க ஊரு இளைஞர்கள் எங்ககிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. அதுபோல இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்க ஊரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை சோஷியல் மீடியாவில் பார்த்துவிட்டு, ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா வருட பிறப்பிற்கு எங்கள் ஊரில் இருந்து 5 பெண்களை தெலுங்கானாவிற்கு கூட்டிட்டு போயிருந்தாங்க. அங்கு நடந்த பங்க்ஷனில் ஆண்கள் மட்டுமே இளவட்டக் கல் தூக்கி போட்டாங்க. அவங்களுக்கு இணையாக நாங்களும் கல் தூக்கிப்போட்டு, அங்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்று வந்தோம். அது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. அதுபோல அங்கிருந்த பெண்களுக்கும் எப்படி கல்லை தூக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொடுத்தோம். கடந்த வருடம் திருநெல்வேலி கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையின் போது அங்குள்ள பெண்களுக்கு கல் தூக்குவதற்கு சொல்லிக் கொடுக்க சொல்லி எங்களை கூப்பிட்டு இருந்தாங்க. நாங்க போய் சொல்லிக் கொடுத்துட்டு வந்தோம் என்று பெருமையாக ராஜகுமாரி சிரிக்கிறார்.
அவரிடம் இந்த மகளிர் தினத்தன்று பெண்களுக்கு நீங்க என்ன அறிவுரை சொல்லுறீங்க என்று கேட்டபோது, நான் அறிவுரை சொல்ற அளவுக்கு பெரிய ஆளு கிடையாது. என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். அதுபோல எல்லா பெண்களும் அவர்களால் முடிந்ததை செய்யணும். அவங்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வரணும் அதுதான் என்னுடைய ஆசை. பொண்ணுங்க என்றால் குழந்தை பெற்றுக்கொண்டு, வீட்டு வேலையை செய்ய வேண்டும் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தாலும் இப்போ அப்படி இல்லை. நம்முடைய திறமையை வெளியே கொண்டு வந்தா தான் நம்முடைய குழந்தைகளும் நம்மை பார்த்து வளரும். இந்த அவசர உலகத்தில் அவங்க என்ன சொல்லுவாங்க இவங்க என்ன சொல்லுவாங்க என்று கூச்சப்பட்டு எந்த இடத்திலும் ஒதுங்கி நிற்காமல் நமக்கு எது வருமோ அதை சிறப்பாக செய்ய வேண்டும். சின்ன சின்ன வேலைகளிலும் நம்மால் ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டும் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று சொல்வேன். நான் 55 கிலோ கல் தூக்குவதற்காக விசேஷ பயிற்சி பெற்றது கிடையாது. விசேஷமான சாப்பாடு கிடையாது. எல்லாரும் வீட்டில் எப்படி சாப்பிடுவார்களோ அதை தான் சாப்பிடுவேன். சில நாட்களில் வீட்டு வேலை அதிகமாக இருக்கிறது என்று சாப்பிடாமல் கூட இருந்து விடுவேன்.
என்னுடைய கணவர் எங்கள் ஊரில் பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு துணையாக பந்தல் போடும் வேலைக்கு போவேன். வீட்டில் தையல் தைத்துக் கொண்டிருக்கிறேன். தெருவில் உள்ள ஒரு சிலருக்கு பிளவுஸ் தைத்து கொடுக்கிறேன். அதில் வரும் வருமானம்தான் என்னுடைய குடும்ப வருமானம். அதனால் என்னால் விதவிதமாக வாங்கி சாப்பிட முடியாது. ஆனாலும் என்னுடைய தைரியத்தால் நான் 41 வயதிலும் 55 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை 27 முறை தூக்கி போட்டு இருக்கிறேன். இதே போல பெண்கள் எல்லோரும் தன்னம்பிக்கையோடு கெத்து காட்டுங்க அவ்வளவுதான் என்று எளிமையாக வழிகாட்டி இருக்கிறார், அன்பு தோழி ராஜகுமாரி.
