• Fri. Dec 13th, 2024

தேயிலை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

BySeenu

Nov 2, 2024

கோவை, கவுண்டம்பாளையம் அருகே தேயிலை ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை பொருட்கள் எரிந்து தீக்கிரையாயின.

கோவை, கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் சாலையில் கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஷா குழுமத்தை சேர்ந்த கிறிஸ்டல் நிறுவனத்தின் தேயிலை குடோன் செயல்பட்டு வருகிறது.

கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட கிடங்குகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு தீபக்‌ஷா என்பவர் வாடகை ஒப்பந்த அடிப்படையில் தேயிலை கிடங்கு அமைத்து 50 க்கும் மேற்பட்டோரை கொண்டு பணி அமர்த்தி தொழில் நடத்தி வந்தார்.

தமிழகத்தில் தேயிலை தோட்டங்களில் இருந்து நேரடியாக தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை ஷா குழுமம் கிரிஸ்டல் நிறுவனம் மூலமாக செய்து வந்த சூழலில், தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

தேயிலை குடோனில் யாரும் இல்லாத சூழலில் நேற்றிரவு சுமார் 8.30 மணி அளவில் திடீரென குடோனில் தீ பற்றி எரிந்து உள்ளது. கடும் புகையுடன் தீ வெளியேறவே அதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதை அடுத்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு அலுவலகத்தில் இருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் கட்டுக்கடங்காமல் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பீளமேடு, கோவை ரயில் நிலையம், கோவைபுதூர் என மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தலா இரண்டு தீயணைப்பு வாகனங்கள் என எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் தீயின் வேகம் குறையாமல் குடோனில் இருந்த ஒட்டுமொத்த தேயிலை மற்றும் பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாயின.

தீயின் வேகத்தில் குடோனின் மேற்கூரைகள் பெயர்ந்த நிலையில் தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் கட்டிடத்தின் முன் பகுதியை இடித்து தீயணைப்பு பணியை மேற்கொண்ட சூழலில் 20 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வர வழைக்கப்பட்டு சுமார் 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அதிகாலை 3 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட குடோனுக்கு மிக அருகிலேயே தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றும் இருந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதை அடுத்து காவல் துறையினர் பொது மக்களை அங்கு இருந்து அப்புறப்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஏராளமான குடியிருப்புகள் உள்ள பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருந்த நிலையில் தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் இடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலைய போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் இரவு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.