நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆனங்கூர் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளால் உயிர்பலி ஏற்படுவதாக கூறியும், வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும், தங்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கி தர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், கிராம மக்களும் திருச்செங்கோடு வெப்படை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெப்படை போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது ஆனங்கூர் அண்ணாநகர் பகுதி. இந்த பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த ஆனங்கூர் திருச்செங்கோட்டில் இருந்து வெப்படை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் இந்த சாலையில் செல்வோர் அதிக வேகத்தில் செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் ஒரு ஆண்டில் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் இறந்து உள்ளனர். நேற்று அண்ணா நகரை சேர்ந்த 63 வயது சின்னசாமி என்பவர் சாலையை கடக்க முற்படும்போது வெப்படை பகுதியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற வாகனம் மோதி இரவு 10 மணிக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்நிலையில் அவரது உடல் இன்று எரியூட்டுவதற்காக மயானம் இல்லாமல் நடமாடும் எரியூட்டு வாகனத்தில் சாலையின் ஓரத்தில் வைத்து எரிக்கப்பட்டது இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஆனங்கூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஆனங்கூர் ரயில்வே கேட் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் இப்பகுதி மக்களுக்கு சுடுகாடு அமைத்து கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த வெப்படை காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி ஆய்வாளர் முருகன் கிராம நிர்வாக அதிகாரி அரசு ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் தங்கள் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் மயான பூமி இதுவென வகைப்படுத்தி கொடுக்க வேண்டும் இதனை வருவாய் கோட்டாட்சியரோ அல்லது வட்டாட்சியரரோ எழுத்து வடிவில் எழுதிகொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சுமார் இரண்டு மணி நேரமாக சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் தேங்கி நின்றன பேருந்துகளில் வந்தவர்கள் நடந்து சென்று அடுத்த பகுதியில் பேருந்துகளில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டது…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை அடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் தொடர்ந்து மறியல் தொடரும் என தெரிவித்து தற்காலிகமாக மறியலை கைவிட்டனர்.





