உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளர்.
சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு செய்து அந்த புதிரை வெளியிடும் ஆய்வாளருக்கோ அல்லது ஆய்வு அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிகக டாலர் ரூ8.57 கோடி பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை மனமார வரவேற்று பாராட்டுகிறேன்.
1924 ஆம் ஆண்டில் சிந்துவெளி நாகரீகத்தை சர் ஜான் மார்ஷல் கண்டுபிடித்து இந்தியாவின் பழமையான நாகரீகம் என்பதை வெளிப்படுத்தினார்.
அப்போது தொடங்கி கடந்த 100 ஆண்டு காலமாக சிந்துவெளி முத்திரைகளின் புதிர்களை அவிழ்கும் முயற்சியில் மேனாட்டு அறிஞர்களும் நம்நாட்டு அறிஞர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் அந்த புதிர் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
கீழடியில் வைகைக்கரை நாகரீகத்தின் தொன்மையை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழுவினர் கண்டறிந்த பின்னர் சிந்துவெளி நாகரீகத்திற்கும் பழந்தமிழர் நாகரீகத்திற்கும் இருந்த இடைவெளி கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இரு நாகரீகங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொல் ஆய்வுகளின் போது சிந்துவெளி எழுத்துகள் கிடைத்துள்ளன. எனவே இரு நாகரீகங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது அறிஞர்களின் முடிவாகும்.
கடந்த100 ஆண்டு காலத்தில் இந்தியாவில் இருந்த எந்த ஆட்சியும் இதுவரை செய்ய முன்வராத அரிய செயலை செயய முன்வந்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மனமார பாராட்டுகிறேன். இந்த பெரும் பரிசு திட்டத்தின் மூலம் சிந்துவெளி எழுத்துமுறை விரைவில் கண்டறியப்படும் என நம்புகிறேன்.