• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மேயர் முத்துவின் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும்.,

ByKalamegam Viswanathan

Jun 1, 2025

மதுரையின் முதல் மேயர் முத்துவின் பெயரை, சிலை அமைந்துள்ள சாலைக்கு சூட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அமைப்பு தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், மதுரை மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதுரையின் அடையாளங்களில் ஒருவராகவும், மதுரை நகராட்சியாக இருந்து மாநகராட்சி ஆனபோது, முதல் மேயராகவும் இருந்தவர் எஸ்.முத்து. தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சி என்ற பெருமையும் மதுரைக்கு உண்டு. மாநகரமாக வளர்ந்த மதுரையின் வளர்ச்சிக்கு பல வகைகளிலும் அடித்தளமிட்டவர் மேயர் முத்து. மதுரை மக்களின் நல வாழ்வுக்காகவும் பல பணிகளையும் அவர் செய்துள்ளார்.

அவரது அயராத உழைப்பையும், அர்ப்பணிப்பையும் மரியாதை செய்யும் விதமாக அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, பாலம் அருகே அவருக்கு சிலை ஒன்றை நிறுவினார். அந்தச் சிலையை மறுசீரமைப்பு செய்த தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெண்கல சிலையாக திறந்து வைத்து மரியாதை செய்துள்ளார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சிலை அமைந்திருக்கும் சாலை தற்போது புது ஜெயில் ரோடு என அழைக்கப்படுகிறது. இப்போது சிறை இருக்கும் இடத்திலிருந்து மதுரை மாநகருக்கு வெளியே மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிலை அமைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டுள்ள சாலைக்கு, ‘மேயர் முத்து சாலை’ என பெயர் சூட்ட வேண்டும். அதுவே, சாலப்பொருத்தமாக இருக்கும். இதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கையாக வைக்கிறோம்”.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.