கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம். எல்ஏ-வான அதிமுகவின் தளவாய் சுந்தரம் மீண்டும் தொகுதியைத் தக்க வைக்கும் திட்டத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார். இவரை எதிர்த்து திமுக இம்முறை பலமான வேட்பாளரை நிறுத்த பரிசீலித்து வருகிறது. இவர்களுக்கு மத்தியில் கவனிக்கப்படும் நபராக மாறி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய ஜெனிபர்.

மரிய ஜெனிபர் – தீபக் சாலமன் தம்பதி இதற்கு முன்பு துபாயில் பணி செய்தவர்கள். அங்கிருந்தபடியே நாதக அயலக பிரிவான ‘செந்தமிழர் பாசறை’ வாயிலாக வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஆதரவு திரட்டியவர்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாய் வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு சொந்த ஊர் திரும்பிய இவர்கள், தற்போது குமரி மாவட் டத்தில் நாதகவுக்காக தீவிர களப்பணியில் இருக்கிறார்கள்.
இவர்களில் தீபக் சாலமன் நாதக மாநில நிர்வாகியாகவும் இருக்கிறார். கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் குமரி மாவட்டத்தில் தங்களுக்கென தனிப்பட்ட செல்வாக்கை சேகரித்து வைத்திருப்பதால் 2024 மக்களவைத் தேர்தலில் மரிய ஜெனிபரை கன்னியாகுமரியில் நிறுத்தினார் சீமான். அந்தத் தேர்தலில் சுமார் 52 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத்தை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பிடித்து பிரதானக் கட்சிகளை மூக்கில் விரல்வைக்க வைத்தார் ஜெனிபர்.
இந்த நிலையில், இந்தத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் ஜெனிபரை களமிறக்குகிறார் சீமான். மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையே இன்னும் அதிகாரபூர்வமாக
ஆரம்பிக்காத நிலையில், மரிய ஜெனிபர், தீபக் சாலமன் தம்பதி குமரி தொகுதியின் கடற்கரை கிராமங்களில் தீவிர திண்ணைப் பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். மாவட்டத்தின் பிரதானப் பிரச்சினை யான கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட சமாச்சாரங்கள் குறித்து இந்தத் தம்பதி சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் நித்தம் ஒன்றாய் தெறிக்கவிடும் வீடியோக்கள் லைக்குகளை அள்ளுவதைப் பார்த்து விட்டு முக்கியக் கட்சிகளின் முகாம்கள் அரட்டியாகிக் கிடக்கின்றன. இவர்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு மற்ற கட்சியினர் வீடியோக்கள் மூலமாகவே பதிலடி கொடுத்தும் களத்தைப் பரபரப்பாக்கி வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய மரிய ஜெனிபர்- தீபக் சாலமன் தம்பதி, “ஆளும் திமுகவும், அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குமரி மாவட்ட மக்களை மாறி மாறி ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெறுகின்றனர். இங்குள்ள விவசாயிகள், மீனவர்கள், மலைகிராம மக்கள் உள்ளிட்ட அனைவரது வாழ்வாதாரமும் பறிக்கப்படுகிறது. அதைத் தான் வீடு வீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறோம். மேலும், அதுகுறித்து ஆதாரத்துடன் வீடியோக் களையும் வெளியிட்டு வருகிறோம்” என்றனர்.
குமரி மாவட்டத்தின் தலையாய பிரச்சினையான இயற்கை வளச் சுரண்டலை தங்களது பிரச்சாரத்தின் பிரதான ஆயுதமாக இந்தத் தம்பதி எடுத்திருப்பதால் எதைச் சொல்லி இதைச் சமாளிப்பது என்று தெரியாமல் மற்ற கட்சிகள் சற்றே மறுகித்தான்
போய்யுள்ளது என்பதே உண்மை.













; ?>)
; ?>)
; ?>)