• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மெரினாவில் கரை ஒதுங்கிய வழிகாட்டும் மிதவை

Byவிஷா

Nov 28, 2024

சென்னை மெரினா கடற்கரையில், துறைமுகங்களில் கப்பல்களுக்கு வழி காட்டும் மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை மற்றும் காசிமேடு துறைமுகத்தில் 2 மிதவைகள் கரை ஒதுங்கின. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இதில், ஒரு மிதவை சென்னை துறைமுகத்துக்கு சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறும்போது, “சென்னை துறைமுகத்துக்கு கப்பல் வரும்போது அதற்கான சரியான பாதையை காட்டும் வகையில் இந்த மிதவைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் இந்த மிதவைகளில் ஒன்று அடித்து செல்லப்பட்டு மெரினாவில் கரை ஒதுங்கியுள்ளது. இது மீட்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.
அதேசமயம், காசிமேட்டில் கரை ஒதுங்கியுள்ள மிதவை எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமானது கிடையாது. எண்ணூர் காமராஜர் துறைமுகம் அல்லது காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு சொந்தமானதா என்பது குறித்து தெரியவில்லை” என்றனர்.