சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், போலியான அடையாள அட்டையுடன் வலம் வரும் தனியார் காவலாளி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான “டிட்வா” புயல் காரணமாக பெய்த கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டியது. தற்போது மழை நின்றிருந்தாலும் ஏரியில் நீர் நிரம்பி, இயற்கை எழிலுடன் காட்சியளிப்பதால் தினந்தோறும் குன்றத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து ஏரியை பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், ஏரியில் பாதுகாப்புப் பணியில் இருப்பதாக கூறும் தனியார் காவலாளி ஒருவர், பார்வையாளர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அச்சுறுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அந்த நபர், காவலாளிக்கான அடையாள அட்டையை அணியாமல், கழுத்தில் “PRESS” என அச்சிடப்பட்ட பத்திரிகையாளர் அடையாள அட்டை அணிந்து கொண்டு கையில் நீண்ட தடியுடன் வலம் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் ஏரியை பார்வையிட்டு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக காதலர்களாக வரும் இளைஞர்–இளம்பெண்களை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இவ்வாறு போலியான அடையாளத்துடன் வருகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் பெரும்பாலானோர் குடும்பத்திற்கு தெரியாமல் வருவதால், புகார் அளிக்க தயங்குவார்கள் என்பதையும் அவர் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், போலி பத்திரிகையாளர் அடையாள அட்டை அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் அந்த தனியார் காவலாளி மீது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி மக்கள் அமைதியாக வந்து செல்லும் சுற்றுலா தளமாக தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.




