• Mon. May 13th, 2024

ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைக்கட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் வெள்ளம்..,

BySeenu

Jan 20, 2024

தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன 16) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்றும் இன்றும் மட்டும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் ஈஷாவிற்கு வருகை தந்தனர்.

இவ்விழாவில் அழிந்து வரும் நாட்டு மாட்டு இனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈஷாவில் வளர்க்கப்படும் 23 வகையான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் காங்கேயம், காங்கிரிஜ், ஓங்கோல், கிர், தார்பார்க்கர், வெச்சூர், மலை மாடு, தொண்டை மாடு போன்ற வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு மாடுகள் ஒவ்வொன்றாக மேடைக்கு அழைத்து வரப்பட்டன. அப்போது, அம்மாட்டு இனத்தின் பெயர், பூர்வீகம், அதன் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

முன்னதாக, பழங்குடி மக்கள், விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து 50-க்கும் மேற்பட்ட மண் பானைகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்தனர். இதில் ஏராளமான வெளி நாட்டினரும், வெளி மாநிலத்தினரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கெடுத்தனர். இதை தொடர்ந்து, நாட்டு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, தானியங்கள் அர்ப்பணிக்கப்பட்டன.

பின்னர், மாலை 5.30 மணியளவில் தமிழ் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பறையாட்டம், மல்லர் கம்பம் மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஈஷாவிற்கு வருகை தந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர். குடும்பத்துடன் வந்திருந்த பொதுமக்கள் நாட்டு மாடுகளுக்கு தங்கள் கரங்களாலேயே உணவூட்டி மகிழ்ந்தனர். மேலும், அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *