கோவை, மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை காட்டெருமை சிறுத்தை புலி மற்றும் பல அரிய வகையான வன விலங்குகளும் உள்ளன. மேலும் மருதமலை, கணுவாய் பகுதிகளில் அடிக்கடி கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது.

இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் இன்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்து உள்ளது. அப்போது அங்கு யாரும் வசிக்காத வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை தனது குட்டியை அங்கேயே விட்டுவிட்டு சென்று உள்ளது. இதனை அடுத்து குட்டி சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது கருஞ்சிறுத்தை குட்டி இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அருகில் உள்ள வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக அங்கு கூண்டுடன் விரைந்து வந்து குட்டியை மீட்டு கூண்டில் அடைத்தனர். தொடர்ந்து அந்த வனப்பகுதியிம் நடுவே சென்று குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். குட்டி இருக்கும் இடத்திற்கு அருகே தாயின் உறுமல் சத்தம் கேட்பதால் வனத்துறையினர் அங்கு குட்டியை விட முடிவு செய்து உள்ளனர்.




