• Sat. May 4th, 2024

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 3 மாத யானைக்குட்டி மீண்டும் யானைக்கூட்டத்துடன் சேர்ப்பு

BySeenu

Apr 7, 2024

கோவை பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் கிராமம் அருகே உள்ள காப்புக்காடு எல்லைக்கு வெளியே உள்ள காஸ் குடோன் பகுதியில் சுமார் 3 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் ரேஞ்ச் களப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக்குட்டியை மீட்டனர். இதுகுறித்து கோவை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறப்பு யானை கண்காணிப்பு குழு ஊழியர்கள் உதவுவதற்காக வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கோயம்புத்தூர் வன கால்நடை மருத்துவ அலுவலர் மேற்பார்வையில் யானைக் குட்டியை கண்காணித்து, இளநீர், குளுக்கோஸ், லாக்டோஜன் ஆகியவற்றைக் கொடுத்தனர். யானைக் குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததையடுத்து பெரியநாயக்கன்பாளையம் ரேஞ்ச் களப்பணியாளர்கள், கோயம்புத்தூர் ரேஞ்ச் களப்பணியாளர்கள், ஏடிஆர் யானை கண்காணிப்பு பணியாளர்கள் என 3 தனிப்படைகள் யானைகள் கூட்டம் இருக்கும் இடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிர தேடுதலுக்குப் பிறகு, நாயக்கன்பாளையம் தெற்கு புளியந்தோப்பு சரகம் அருகே 4 பெண் யானைகள் மற்றும் 1 குட்டி யானை அடங்கிய யானைக்கூட்டம் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்ட யானைக்குட்டி மீண்டும் கூட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட யானைக் குட்டியை யானைக்கூட்டம் ஏற்றுக்கொண்டது. மேலும் யானைக்கூட்டம் மீண்டும் ஒன்று சேர்ந்த ஆண் யானைக்குட்டியின் நிலையை கண்டறிய 3 தனிப்படைகள் உதவியுடன் யானைக்கூட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *