• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Sep 30, 2022

நற்றிணைப் பாடல் 54:

வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு! எனவ கேண்மதி:
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!

பாடியவர்: சேந்தங் கண்ணனார்
திணை: நெய்தல்

பொருள்:
கருங்கால் வெண்குருகே! நீ என் தோழன் ஆயிற்றே. நான் சொல்வதைக் கேள். வளைந்திருக்கும் கழிநீரிலே மேய்ந்தபின் நீ உன் உறவுமுதலிடம் சென்று உறவு கொண்டு பறக்க விரும்புகிறாய். ஆயினும், புலால் அருந்தும் உன் உறவுகளோடு சிறிது நேரம் இருக்கிறாய். மாலைக்காலம் சிறிதாயினும் அப்போது தனிமை என்னை வாட்டுகிறது. அதனை நீ அறிவாய் அல்லவா. உனக்கு அன்பு இருக்கிறது. என்னை வேறு யாரோ என்று எண்ணாதே. என் குறை இன்னது என்று நீ வாழும் துறைக்கு உரியவனிடம் எடுத்துச்சொல் என்று தலைவனைப் பிரிந்திருந்த தலைவி வெண்குருகுப் பறவையைத் தலைவனிடம் தூது அனுப்பி மாலை வேளையில் தான் வருந்துவதை எடுத்துரைக்குமாறு வேண்டுகிறாள்.