சீனாபடகில் இலங்கையிலிருந்து தப்பி வந்த போலந்து நாட்டை சேர்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த முணங்காட்டு பகுதியில் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்த தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆறு காட்டுத்துறையில் இருந்து சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் நடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலந்து நாட்டை சேர்ந்த வாத்திஸ்வாப் (வயது 40) என்பது தெரியவந்தது.
இலங்கையை சுற்றிப்பார்க்க வந்தவர் அடிதடி வழக்கில் சிக்கி ஜெயிலில் இருந்து பின்பு 2000 டாலர் அபராத தொகை கட்டி வெளியில் வந்துள்ளார். 2 ஆண்டுகளாக இலங்கையிலேயே சுற்றி திரிந்துள்ளார். பின்பு சொந்த நாடு செல்வதற்கு முயற்சி செய்து ரூ.1 லட்சம் கொடுத்து சீனாவில் தயாரான ரப்பர் படகை வாங்கி அதில் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழக கோடியக்கரைக்கு தப்பி வந்துள்ளார். அங்கிருந்து சென்னை செல்ல விசாரித்த போது போலீசாரிடம் மாட்டி உள்ளார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
