• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜனாதிபதி தேர்தல்… வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை ..

Byகாயத்ரி

Jun 30, 2022

நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டு உள்ளார். அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை களமிறக்கி உள்ளன. முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தி உள்ளன. இவர் கடந்த 27-ந் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திரவுபதி முர்முவோ கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் இருவரும்தான் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களை தவிர மேலும் 100-க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் நேற்று ஆகும். நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன.

அந்த வகையில் மராட்டியத்தை சேர்ந்த குடிசைவாசி ஒருவர், பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பெயரை கொண்ட ஒருவர், டெல்லியை சேர்ந்த பேராசிரியர், தமிழகத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் என பல்வேறு தரப்பினரும் இந்த தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை இன்று மாலையில் தெரியவரும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை 50 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். மேலும் 50 பேர் வழிமொழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.