• Sun. Apr 28th, 2024

திமுகவை புகழ்ந்து தள்ளும் செங்கோட்டையன் – காரணம் இது தான்?

By

Aug 27, 2021 , ,

திராவிட இயக்கம் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் பேசியது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்றைய தினம் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான கே.செங்கோட்டையன், காமராஜர் அனைத்து கிராமங்களிலும் பள்ளிகளை தொடங்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்தார். அவருக்கு பின் வந்த ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு தலைவர்களுக்கும் இங்கே தனித்தனி வரலாறு இருக்கிறது.
திராவிடம் என்று சொன்னாலே 1967ஆம் ஆண்டிற்கு பின்னர் திராவிட மண் தான் தமிழ்நாட்டில் ஆள முடியுமே தவிர, வேறு எவராலும் ஆள முடியாது என்ற வரலாற்றை படைத்தவர் தந்தை பெரியார். அவர் வழியில் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி நடந்தார்கள். எனவே தான் திராவிட இயக்கம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டத்தை அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம் தெரிவித்துள்ளார். 9 முறை சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்து வருகிறேன். தற்போது பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திராவிட இயக்கத்தின் வழிவந்த அதிமுகவும், திமுகவும் தான் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியுமே தவிர, இங்கு வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாஜகவின் வியூகம் தமிழக மண்ணில் எடுபடாது என்ற வகையில் தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிக்கே அதிர்ச்சியூட்டும் வகையில் அதிமுகவின் மூத்த தலைவர் கருத்து தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *