• Thu. May 2nd, 2024

விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவு நிறைவு

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும் வாக்களித்தனர்.

நடிகர் விஜய் காலையிலேயே வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துசென்றார். அதேபோல, சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களும் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மனைவி கிருத்திகாவுடன் சென்று எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களித்தார்.

மூன்று மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தர்மபுரியில் 65.6 சதவீதமும், நாமக்கலில் 64.1 சதவீதமும், கரூரில் 63.56 சதவீதமும் பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக சென்னையில் 31.8 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தது.

மதுரையில் 42.7 சதவீதமும், திருப்பூரில் 45.5 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. ஐந்து மணிக்கு முன்னதாக வாக்குச் சாவடிக்குள் இருந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்து மணிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆறு மணிக்கு அதற்கான நேரமும் முடிவடைந்த நிலையில் வாக்குபதிவு நிறைவு பெற்றது,

வாக்குபதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் பெட்டிகளில் வைக்கப்பட்டு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் இயந்திரங்கள் பிப்..22 தேதி எண்ணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *