• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கடைசி விவசாயி படத்திற்கு காவடி எடுக்கும் இயக்குனர் மிஷ்கின்

காக்கா முட்டை மணிகண்டன் தயாரித்து இயக்கியுள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் கடந்த வெள்ளி அன்று வெளியானதுஇந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது காரை ஓட்டிக் கொண்டே இந்தக் ‘கடைசி விவசாயி’ படத்தைப் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதில் மிஷ்கின் பேசும்போது, இந்தப் படத்தைப் பற்றி பேச வேண்டும். எப்படி பேசுவது என்று யோசித்தேன். என் மகளுக்கு ஒரு கடிதம் எழுதி அதனை பத்திரிகைகளுக்கு கொடுக்கலாமா என்றுகூட யோசித்தேன். எனக்கு வாழ்க்கையை சொல்லித் தந்த படமாக இதனைப் பார்க்கிறேன்.
மிஷ்கின் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேசுவார் என்று சொல்வார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். நான் என் மனதில் இருந்து பேசுகிறேன். என் மகளிடம் இந்தப் படத்தைப் பார்க்க சொல்வேன்.படம் மெதுவாக நகர்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் மெதுவாக நாம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொல்கிற படம் இது.
நான் இப்பொழுது காரில் பயணிக்கிறேன். ஆனால் 20 செண்ட்கூட நிலமில்லாத குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். என் தந்தையார் விவசாயம் செய்தவர் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
என் மகள் தற்போது கனடாவில் படிக்கிறாள். எனக்கு மிகப் பெரிய வருத்தம். அவள் கனடாவிலேயே இருக்கப் போகிறாளா என்று தெரியவில்லை. ஆனால் என் மகளிடம் எங்கே உன் வாழ்நாளை செலவிடப் போகிறாய் என்பதை மறுபரிசீலனை செய் என்று சொல்வேன்.இது மிகவும் வலிமையான படம். தன் ஆன்மாவை சுத்தப்படுத்த வேண்டும் என மணிகண்டன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். கடந்த நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம்.
தயவு செய்து அனைவரும் இந்தப் படத்தை பாருங்கள். கடந்த 20 வருடங்களில் நாம் எவ்வளவு பொறுக்கித்தனமான படங்களை பார்த்திருப்போம்…? எவ்வளவு மோசமான படங்களை நாம் கொண்டாடி தீர்த்திருக்கிறோம்…?
இந்தப் படத்தை ஒரு முஸ்லிம் கொண்டாட வேண்டும். ஒரு கிறிஸ்தவன் கொண்டாட வேண்டும். இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்த என் தம்பி விஜய் சேதுபதியை நான் கட்டித் தழுவி முத்தம் கொடுக்க வேண்டும். அவன் படத்தில் ஒரு சாமியாகவே வந்துவிட்டு போய்விட்டான். காற்றோடு காற்றாக கலந்துவிட்ட அந்த காட்சி இந்தியாவில்எடுக்கப்படவேயில்லை.படத்தில் இசையைக் கையாண்ட விதமும் சிறப்பாக இருந்தது. இளையராஜா இல்லையே என்ற ஒரு சந்தேகத்துடன் சென்றேன். இளையராஜாவால்கூட இந்தப் படத்துக்கு உதவி செய்ய முடியாது. எவ்வளவு பெரிய இசையமைப்பாளராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் எல்லா தொழில் நுட்ப அம்சங்களையும் தாண்டி இந்தப் படம் மிகப் பெரிய உயர்வுக்கு சென்று விட்டது.
இந்தப் படம் மகா உன்னதமான படம். ஒரு தவறு கூட இந்தப் படத்தில் இல்லை என்று சொல்வேன். இந்தப் படத்தில் பணி புரிந்தவர்களின் கால்களுக்கு நான் முத்தமிடுவேன்…” என்று பேசியுள்ளார்.