• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அரசியலில் அண்ணா எனும் ஆளுமை

1947 ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா சுதந்திரமடைந்ததை கொண்டாடிய நேரம் தமிழகத்தில் மட்டும் அதனை கறுப்பு தினமாக அனுசரித்த போது எழுந்த குரல், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்று ஓங்கி ஒலித்த குரல், ஒன்னரை கோடி தொண்டர்கள் கடற்கரையில் கதறியும் பேச மறுத்த குரல் அது தான் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை எனும் அண்ணாவின் குரல்.
அண்ணாவின் நினைவு தினமான இன்று அவரது அரசியல் ஆளுமை குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.
நீதிக்கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்துகொண்டிருந்த காலம். ஆதி திராவிடர்கள் உள்ளிட்ட பிராமணர் அல்லாதார் நலனுக்கான திட்டங்களை நீதிக்கட்சி அரசுகள் செயல்படுத்தியிருந்தன. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியை அவர்கள் ஆதரித்தனர். அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை அமர்த்துவது, கல்வியைப் பரவலாக்குவது ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால், நீதிக்கட்சித் தலைவர்கள் பலர் நிலவுடைமையாளர்கள். பிரிட்டிஷ் அரசின் பதவி, பட்டங்களை தாங்கியவர்கள். இது அவர்களை எளிய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திய காலம் அது.

ஆனால், பிராமணர் அல்லாதார் அரசியலுக்கு என்று இருந்த ஒரே கட்சி நீதிக்கட்சிதான் என்பதால் அண்ணாவுக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. அண்ணாவின் நீதிக் கட்சி தொடர்பு அவருக்கு, ராஜாக்களோடும், பெரும் பணக்காரர்களோடும், கனவான்களோடும் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

இதன் நீட்சியாக பெரியாரின் ஆஸ்தான தொண்டராய் அண்ணா இருந்து வந்தார். பெரியார் நடத்தி வந்த பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவது, தலையங்கம் எழுதுவது என தனது எழுத்து திறமைக்கு தீணி போட ஆரம்பித்தார். நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறிய போது 70 வயது கொண்ட பெரியார் 40 வயது கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அண்ணா பெரியார் இடையே விரிசல் ஏற்பட்டது. திமுகவின் உருவாக்கத்திற்கு இது முக்கிய காரணம்.
1949ம் ஆண்டு செப்டம்பர் 17 ந் தேதி திமுக உதயமானது. தனது கட்சியில் சேர்ந்த அடிப்படை உறுப்பினரை கூட தம்பி வா தலைமை ஏற்க வா என்று உரிமையுடன் அழைத்தார். பின்னாளில் அதே பாணியை உடன்பிறப்புக்கு கடிதம் என்ற பெயரில் முரசொலியில் கலைஞர் கருணாநிதி எழுதி வந்தார்.
1967-ம் ஆண்டு அது. தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த சமயம். காங்கிரஸ் தொண்டர்களிடம் சோர்வும், திமுகவினரிடம் உற்சாகமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. காமராஜர் தோற்றுவிட்டார். காமராஜரின் தோல்வியை காங்கிரஸாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 1949-ம் ஆண்டு ஆரம்பித்த திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. அண்ணா முதல்வராகப்போகிறார். ஆனால் அண்ணா கலக்கத்துடனே இருந்தார். ”வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்த வேண்டாம். காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என்றார் அண்ணா. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என மனமுவந்து கூறிய நாகரிக அரசியலின் ஆணிவேரான அதே அண்ணாதான்!
இன்றளவும் அண்ணாவைப்போல ஒரு நாகரிக அரசியல்வாதியை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது. பெருந்தன்மையுடன் நடந்துகொள்வது அண்ணாவின் அல்டிமேட் இயல்பு. ‘தேர்தலில் காங்கிரஸ் வென்றே ஆக வேண்டும்’ என 1967 தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்கிறார் பெரியார். எதிரணியில் இருப்பதோ அண்ணா; பெரியாரின் போர்ப் படைத்தளபதி. அண்ணாவை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரிக்கிறார் பெரியார். பெரியார் குறித்து அண்ணா தவறியும் எங்கேயும் ஒரு வார்த்தைக்கூட தவறாக பேசியதில்லை.
எல்லாம் முடிந்ததும், ‘வாங்க போயிட்டு பெரியார பாத்துட்டு வெற்றியை காணிக்கையாக்கிட்டு வருவோம்’ என்று தன்னுடைய சகாக்களை அழைக்கிறார் அண்ணா. ஆச்சரியத்துடன் அன்பில் தர்மலிங்கம், நெடுஞ்செழியன், கருணாநிதி எல்லோரும் கிளம்பி பெரியாரை பார்க்கச் செல்கின்றனர். ஒரு திரைப்படத்தின் காட்சியைப்போல, அண்ணாவை பார்த்ததும் பெரியார் நெகிழ்கிறார். அண்ணா உள்ளம் மகிழ்கிறார். ‘நீங்க சொல்றபடிதான் ஆட்சி நடக்கும்’ என வாக்களித்து பெரியாரிட்ட பாதையில் ஆட்சியின் தடங்களை பதிக்கிறார் அண்ணா. கட்சியில் தலைவர் நாற்காலியை பெரியாருக்காகவே இறுதிவரை வைத்திருந்தவர் அவர். அந்த அரசியல் கண்ணியம் அண்ணாவுக்கு மட்டுமே வாய்த்தது.
இங்கே பெரியார், கருணாநிதியை விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனால், அண்ணாவை உங்களால் அத்தனை எளிதில் விமர்சித்துவிட முடியாது. காரணம், தன்னை தாக்குகிறவரைக்கூட தாங்கக்கூடியவர் அவர். அண்ணாவின் பிரியத்துக்குரியவரான ஈ.வி.கே.சம்பத் கட்சியிலிருந்து விலகுகிறார். அண்ணாவால் ஏற்றுக்கொள்ள முடியாத பிளவு அது. திமுகவிலிருந்து வெளியேறியதும் `திராவிட நாடு பகல் கனவு’ என முழங்கிய சம்பத், அண்ணாவின் மீது பல விமர்சனங்களை முன்வைக்கிறார். சம்பத் பிரிவு குறித்து அண்ணாவிடம் கேட்கிறார்கள், ‘அது வைரக்கடுக்கண், காது புண்ணாக இருக்கிறது. அதனால் கழட்டி வைத்திருக்கிறேன்’ என்கிறார். அப்போதும் கூட சம்பத் தானா வைரக்கடுக்கண்? புண்ணாக போனது இவர் காதுதானாம்! இந்தப் பண்பை அண்ணாவைத் தவிர, யாரிடத்திலும் பார்க்க முடியாது.

‘அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல’ திருக்குறளுக்கு பக்காவான பொருத்தம் அவர். பெரியாரை பிரிந்தபோது, பெரியார் விமர்சிக்கிறார். அண்ணா அமைதியாக இருக்கிறார். ஈ.வி.கே.சம்பத் விமர்சிக்கிறார். அவரை ‘வைரக்கடுக்கண்’ என்கிறார் அண்ணா. திட்டி தீர்க்கிறார் ராஜாஜி. தான் கலந்துகொள்ளும் கூட்டங்களிலெல்லாம் அண்ணாவை வசைபாடுகிறார். ஆனால், அவருக்கு ‘மூதறிஞர்’ என்ற பட்டம் கொடுத்து அழகு பார்க்கிறார் அண்ணா. ‘இப்படியெல்லாம் ஓர் அரசியல் தலைவரா?’ என மிரளவைக்கிறார்.
கடுஞ்சொல் பேசாமல் கருத்தை வலுவாக விதைப்பதில் வித்தகர் அண்ணா. எதிர்கட்சிகளை மாண்போடு அணுகும் பண்பை அண்ணாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அப்போது காமராஜர், ‘திமுகவை ஒழிக்காமல் விடமாட்டேன்’ என கங்கணம் கட்டி வலம்வந்தார். அதற்கு அண்ணா, காமராஜரை எதிர்த்தோ, வசைபாடியோ, விமர்சித்தோ எதுவும் பேசவில்லை. மாறாக, ”நீங்களோ ஆளும்கட்சி. அதுவும் அகில இந்திய கட்சி. அத்தோடு நீங்கள் முதலமைச்சர் வேறு; அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. நானோ ஒரு சின்னக் கட்சியின் தலைவன். என்னைப்போய் நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது பட்டாக்கத்தியை எடுத்து பட்டாம்பூச்சியைவெட்டுவது போல” என்றார்.
எதிர்ப்பவரையும் அரவணைக்கும் பண்பு அழகானது தானே? அந்த அரசியல் மாண்பை அறிந்ததாலோ என்னவோ, ‘இதயத்தை கொடுத்திடு அண்ணா; வரும்போது எடுத்துவருகிறேன்’ என கருணாநிதி கூறினார் போல.
அரசியல் மட்டுமல்ல பத்திரிகை துறையிலும் அண்ணாவின் பங்கும் முக்கியமானது. அண்ணா நடத்தி வந்த பத்திரிகைகள் திராவிட நாடு (1942-1963), மாலை மணி (1949-1950), நம் நாடு (திமுகவின் கட்சி பத்திரிகை), தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் HomeLand (1957) , HomeRule என்று பத்திரிகை நடத்தி வந்தார். மேலும் குடியரசு விடுதலை போன்ற பத்திரிகைகளிலும் துணை ஆசிரியராக அண்ணா பணி புரிந்துள்ளார்.
திராவிட நாடு கொள்கையை அண்ணா முன்வைத்தபோது பெரும் சர்ச்சையானது. தி.மு.க-வை தடைசெய்ய வசதியாக, மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரும் அளவுக்குப் போனது. 1962-ம் ஆண்டு சீனப் படையெடுப்பின்போது, உருவான கொந்தளிப்பான அரசியல் சூழலில், திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுவதாக அறிவித்தார். திராவிட நாடு ஆதவாளர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குப் பயந்து அண்ணா பின்வாங்கிவிட்டதாக அவர்கள் விமர்சித்தனர். ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில், நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால், வருங்காலத் தலைமுறை நம்மைச் சபிக்கும்’ என்று 1962 அக்டோபர் மாதம் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்ததும், திராவிட நாடு கொள்கையை தான் கைவிட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் அண்ணா. இதன்மூலம் தான் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவர் என்பதை நிரூபித்தார் அவர்.

அதேசமயத்தில் ”கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். ‘சூட்சுமம்’ புரிகிறதா தம்பி?” என்று தி.மு.க. தொண்டர்களுக்கும் தன் நிலைப்பாட்டை புரியவைத்தார் அண்ணா.

அண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, “இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையேக் காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்குப் படித்தவனல்ல என்றாலும், சாமான்யனாகிய நானும் குடியரசுத் தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்” என்றார். அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது என்பது அதுவே முதல்முறை. முதல்வராக அண்ணா இருந்தபோது, அவரின் பேச்சு எதிர்க்கட்சியினரும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒரு சமயம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மிருகக்காட்சி சாலைக்கு நான் தந்த ஆண் புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த பெண் புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அண்ணா, “சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து, உங்கள் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது.

1967 தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் பிராமணர் அல்லாத கட்சி மக்கள் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கினார். அண்ணாவின் தலைமையில் பொதுக்கூட்டம் 7 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பொதுக்கூட்டம் பத்து மணியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் முகங்களில் வாட்டம் , மேடை ஏறிய அண்ணா மாதமோ சித்திரை , மணியோ பத்திரை , உங்கள் கண்களிலோ நித்திரை என்று பேச்சை தொடங்கினார். மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் களைகட்ட ஆரம்பித்தது.
அண்ணாவின் சாதனைகள் பல இருந்தாலும் (1) சுயமரியாதைத் திருமண சட்டம் (2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல் (3) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை – தமிழும், ஆங்கிலமும் தான் இங்கு என்று சட்டம் செய்தவர்.

இந்த மூன்றில் கை வைக்க முடியாத காலம் தொட்டு, இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டு இருக்கிறார் என்ற அர்த்தம் நிறைந்த சொற்களைப் பதித்தவர் அண்ணா.