• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை வகுத்த அறிவுறுத்தல்!…

By

Aug 12, 2021

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்றுத் திறனளிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படி செலவிடப்பட்டது என அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் குடும்பத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவியுடன், மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், 2020ம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரண உதவியை பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், 2021ம் ஆண்டு எந்த உதவியும் பெறவில்லை என்றும் வாதிட்டனர்.


மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 25 சதவீத கூடுதல் உதவியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாக தெரியவில்லை எனவும், அவர்கள் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

சமீபத்திய அறிக்கையில் இடைக்கால நடவடிக்கைகள் பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்றை மாநில அரசு வகுக்க வேண்டும் எனவும் அந்த திட்டம் அடுத்த விசாரணையின் போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்து, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.