• Fri. Apr 26th, 2024

சிவசங்கர் பாபர் ஜாமின் கோரிய வழக்கு!..

By

Aug 12, 2021

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கனவே அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை சீலிடப்பட்ட கவரில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2015, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்த புகார்களில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து சென்ற பிறகும் 20 நடன நிகழ்ச்சிகளை தன்னுடைய பள்ளியில் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபாவை குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கைதுக்கு பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் அவர் வாதிட்டார்.

10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலேயே வெவ்வேறு மாதங்களில் 3 முறை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *