இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியிருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே தமிழகம், மேற்கு வங்கம், மகராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்த மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது, பூஸ்டர் டோஸ், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், ஒமிக்ரானுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.








