• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்: ஆட்சியர்களுக்கு ராதாகிருஷணன் கடிதம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.


அதில், தமிழக அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும். இரண்டாம் தவணை வந்தும் தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதேபோல் 15 வயது மூர்த்தி அடைந்தவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தொற்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தனிமைப்படுத்துதல், தொடர்புடைய நபர்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள அவர், 1.15 லட்சம் படுக்கைகள் தமிழகத்தில் தயாராக உள்ள நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொற்று கண்டறியப்பட்டவர்கள் அவர்களுடன் இருந்த நபர்களை கட்டாயம் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொற்று அதிகம் கண்டறியப்படும் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதே போன்று மற்ற மாவட்டங்களிலும் அஜாக்கிரதையுடன் இல்லாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.