• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

நியாயவிலை கடையில் எடை 2 முதல் 4 கிலோ வரை குறைவாக வழங்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

​மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 16-வது வார்டு பகுதி ஆர்சி பள்ளி அருகில் இருக்கும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ மற்றும் 15 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் இரண்டு முதல் நான்கு கிலோ வரை குறைவாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

இந்தக் கடையின் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், அரசு வழங்கும் மானிய விலைப் பொருட்களைப் பெற்று வருகின்றனர்.

​இந்நிலையில், இந்த நியாயவிலைக் கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக குறைவாக எடை போட்டு வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளன.

​குறிப்பாக, 20 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களுக்கு 16 கிலோவும், 15 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டியவர்களுக்கு 12 கிலோவும் மட்டுமே வழங்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதேபோன்று சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளும் எடை குறைவாகவே விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறும் பொதுமக்கள்.

​இது குறித்துத் தகவலறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், கடையில் வாங்கிய பொருட்களைத் தனியாக எடை போட்டு பார்த்துள்ளனர். அப்போது, ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை பொருட்கள் குறைவாக இருப்பது உறுதியானது.

தமிழக முதல்வரின்​ புகைப்படம் வைத்துள்ள இடத்தின் கீழேயே தராசை வைத்து குறைவான பொருட்கள் வழங்கி முறைகேட்டில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏழை எளிய மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்களில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறுவது மிகுந்த வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நியாயவளக்கடையின் விற்பனையாளரிடம் கேட்டால் எடையாளரை தனியாக நியமித்து அவர்களுக்கு தானே சம்பளம் வழங்குவதாகவும் அந்த பணத்தை இவ்வாறு செய்வதன் மூலமே வழங்க முடியும் எனவும் கூறுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

கூடுதல் பணியாளர் தேவை என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விட்டு விட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் மீது முறைகேட்டில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

​எனவே, மதுரை மாவட்ட நிர்வாகமும், உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளும் இது குறித்து உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், எடை குறைவாகப் பொருட்களை விநியோகிக்கும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் தனியாக எடையாளர் நியமித்து பொருட்களை வழங்கும் பட்சத்தில் மொத்தமாக வெளிச்சந்தையில் விற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் விற்பனையாளர் மற்றும் தற்காலிக எடையாளர் ஆகியோரிடம் உரிய விசாரணை நடத்தி பொது மக்களுக்கு உரிய அளவில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கார்டுக்கு ஐந்து கிலோ வீதம் 500 கார்டுகளுக்கு 2500 கிலோ அரிசி நாள் ஒன்றுக்கு முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.