கோவை சித்தாப்புதூர் ஸ்ரீ மணிகண்டன் ஆலயத்தில் கார்த்திகை 1-ஐ முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு, கோவை காந்திபுரம் அடுத்த சித்தாப்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மணிகண்டன் சுவாமி திருக்கோயிலில் ஐயப்ப பக்தர்கள் இன்று (கார்த்திகை 1) திரளாகக் கூடி மாலை அணிந்து தங்களது சபரிமலை விரதத்தைத் தொடங்கினர்.

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, இன்று அதிகாலை முதலே சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, குருசாமிகளின் கைகளால் துளசி மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டனர். முதன்முறையாக சபரிமலைக்குச் செல்லும் கன்னிசாமிகளும், வழக்கமாகச் செல்லும் பக்தர்களும் மிகுந்த பக்திப் பரவசத்துடன் சரண கோஷம் முழங்க விரதத்தைத் தொடங்கினர்.
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், ஆலயம் முழுவதும் வண்ண மலர்களாலும், தீபங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
