37 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட 4 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி தேர் நிறுத்தம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது போலீசாரை பார்த்ததும், ஒரு பெண் உட்பட 4 பேர் நான்கு மூட்டைகளை போட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அந்த மூட்டைகளை சோதனை வித்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 37 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, தப்பி ஓடியவர்களை போலீசார் தேடினார்கள். அங்கு உள்ள பழக்கடை பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பியாருல் ஷேக், ஷகீல் முஸ்தாக், ஹுமாயூன் சேக், நர்கீஸ் பீபி என்று தெரிய வந்தது. கஞ்சாவை வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கடத்தி கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் சப்ளை செய்ய வந்து உள்ளனர். பெண் உள்பட நான்கு பேரையும் அவிநாசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. காவல்துறையினர் சார்பில் கைப்பற்றப்பட்ட கஞ்சா கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி ராஜலிங்கம் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
