மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சிறப்புக் கூட்டமும், விழிப்புணர்வு பேரணியும் நேற்று கோலாகலமாகவும், எழுச்சியுமாகவும் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட போதை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரெட் கிராஸ் ராஜ்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மாரியம்மாள், திருப்பரங்குன்றம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வீரலட்சுமி மற்றும் திருப்பரங்குன்றம் சார்பு ஆய்வாளர் தார்ச்சுஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆய்வாளரின் நெக்குருகும் உரை – கண் கலங்கிய மாணவர்கள்:
நிகழ்ச்சியில் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது அவர், போதைப்பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் பேராபத்துகள், சீரழியும் குடும்ப சூழல் மற்றும் விலைமதிப்பற்ற மாணவர்களின் எதிர்காலம் பறிபோவது குறித்து நிதர்சனமான உண்மைகளை எளிய எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.
ஆய்வாளரின் தாயுள்ளம் கலந்த அறிவுரையும், போதையினால் பாதிக்கப்பட்டு சீரழிந்த குடும்பங்களின் கதைகளும் மாணவர்களின் மனதை ஆழமாகத் தொட்டன. இதனால் நிகழ்விடத்திலேயே பல மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதனர். போதையின் கோரமுகத்தை உணர்ந்த மாணவர்கள், தங்களது எதிர்காலத்தை நல்வழிப்படுத்திக் கொள்ளவும், போதைப்பொருட்களை அறவே ஒழிக்கவும் உறுதுணையாக இருக்க உறுதியேற்றுக் கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த அனைவரையும் சிந்திக்க வைத்தது.
விழிப்புணர்வு பேரணி:
கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை காவல்துறையினரும், தலைமை ஆசிரியரும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
பேரணியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், “போதையைத் தூக்கி எறிவோம், புது உலகைக் படைப்போம்”, “மாணவர் சமூகம் காப்போம், போதை பழக்கத்தை மறுப்போம்” போன்ற விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில், போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.