• Sat. Oct 31st, 2026

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் 11 அம்ச கோரிக்கைகள்..,

ByKalamegam Viswanathan

Oct 31, 2026

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவம்பர் 3-ஆம் தேதி இரவு 8 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

பொதுமக்களின் அவசர மருத்துவ சேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உயரிய கொள்கையின் வழியில், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலின்படியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு. மு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின்படியும், தொமுச பேரவைத் தலைவர் திரு. கி. நடராசன் அவர்கள் தலைமையில் 30.10.2026 அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் தொமுச நிர்வாகிகள் கலந்துகொண்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நியாயமான 11 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர் ஆணையரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

இருப்பினும், EMRI GHS நிர்வாகத்தின் ஹைதராபாத் தலைமை அலுவலக அதிகாரிகள் ஆய்விற்காக வந்திருந்த காரணத்தினால், நிர்வாகத் தரப்பு நேற்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, வேலைநிறுத்த அறிவிப்பு நவம்பர் 3 இரவு 8 மணிக்கு மேல் அமலுக்கு வருவதைக் கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் மற்றும் அவசர சேவையைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் ஆணையர் அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தொழிலாளர் ஆணையரின் உத்தரவு & அடுத்தகட்ட நடவடிக்கை:
வரும் நவம்பர் 3, 2026 அன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் EMRI GHS நிர்வாகம் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கட்டாயமாகப் பங்கேற்றுப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார். இதற்கான அழைப்புக் கடிதம் நிர்வாகத்திற்கும் அரசு தரப்பிற்கும் நேரடியாக வழங்கப்பட உள்ளது.

எனவே, நவம்பர் 3 அன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்த முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொமுச-வின் மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி தவறாமல் கலந்துகொள்ளுமாறு மாநில தலைமை கேட்டுக்கொள்கிறது.