• Sat. Oct 31st, 2026

மதுரை அவனியாபுரத்தில் குத்துவிளக்கு மெத்தையில் விழுந்து தீ விபத்து..!

ByKalamegam Viswanathan

Oct 31, 2026

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பிரசன்னா காலனி 9-வது தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி (வயது 64). இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விளக்கேற்றியபோது, எதிர்பாராதவிதமாக விளக்கு கையில் தட்டி மெத்தையில் விழுந்து தீப்பற்றியது.

தீ மளமளவெனப் பரவியதால், வீட்டின் மாடிப் பகுதி முழுவதிலும் புகையும் தீயும் சூழ்ந்தது. மாடியில் இருந்த மூதாட்டி இந்திராணி வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டார்.,

தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி இந்திராணியின் கூக்குரலால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து 108 அவசர உதவி மையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தினர் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர்.

அவனியாபுரம் பிரசன்னா காலணியில் உள்ள சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பைலட் ஹரி விக்னேஷ் மற்றும் மருத்துவ உதவியாளர் (EMT) முத்துப்பாண்டி ஆகியோர், வீட்டில் புகைக்கு நடுவே சிக்கியிருந்த மூதாட்டியைப் பாதுகாப்பாக மீட்டு மூச்சுத் திணறுகளுக்கான முதலுதவி அளித்து உதவி செய்தனர்.

அதே நேரத்தில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் மாடியில் பரவிய தீயை தண்ணீர் ஊற்றி தீ மேலும் பரவாமல் தடுத்து, தீவிரமாகப் போராடி முற்றிலுமாக தீயை அணைத்தனர்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரிதமான செயல்பாடு மற்றும் மதுரை டவுன் தீயணைப்புத் துறையினரின் விரைவான மீட்பு நடவடிக்கையால், இத்தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித உயிரிழப்பு மற்றும் காயமும் ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மீட்புக் குழுவினரின் இந்தத் திறம்பட அமைந்த துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் பிரசன்னா காலனி பகுதி வாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.