• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

பஞ்சாலைத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்!

BySeenu

Oct 28, 2026

கோவை தேசிய பஞ்சாலைக் கழக (NTC) தலைமை அலுவலகம் முன்பாக, நிலுவைச் சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை உடனடியாகத் திறக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த NTC பஞ்சாலைத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (NTC) கீழ் கோவையில் இயங்கி வந்த 5 பஞ்சாலைகள், காளையார்கோவில் மற்றும் பரமக்குடியில் உள்ள ஆலைகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 7 பஞ்சாலைகளும், இந்தியா முழுவதிலும் 23 பஞ்சாலைகளும் இயங்கி வந்தன. கடந்த 2020-21 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவலின் போது இந்த ஆலைகளின் உற்பத்திப் பணிகள் முடக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை இந்த பஞ்சாலைகள் மீண்டும் இயக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% சம்பளமும் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் essential service எனப்படும் அத்தியாவசியப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கடந்த ஒரு ஆண்டாகச் சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் இதுவரை எந்தவித சாதகமான முடிவும் எட்டப்படவில்லை. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வாழ்வாதாரமின்றித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் உள்ள சம்பளத்தை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் என்றும், மூடப்பட்டுள்ள ஆலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கோவை NTC தலைமை அலுவலகம் முன்பாகத் தொழிலாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் கோவை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் உள்ள 4 NTC பஞ்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.