தமிழகத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது
வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வருஷநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வழக்கமாக நடைபெறும் முல்லை பெரியார் பாசனக் கால்வாய் மூலமான முதல் போக நெல் சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போனதால், இரண்டாம் போக சாகுபடிவாவது கைகொடுக்குமா? என்ற கவலையில் சோழவந்தான், அலங்காநல்லூர், வாடிப்பட்டி மற்றும் பாலமேடு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்தச் சூழலில், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது.

இந்த நீரானது மதுரை மாவட்ட எல்லையான சோழவந்தான் பகுதியை வந்தடைந்தது.
கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் வறண்டு கிடந்த வைகை பாலைவனம் போல் வைகை ஆற்றில், தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதைப் பார்த்து விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சோழவந்தானைக் கடந்து மதுரையை நோக்கிச் செல்லும் இந்த நீர்வரத்து, தங்களின் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை விவசாயிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.





