சென்னை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தொடர் மழை மற்றும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மூன்று முறை ஆலோசனை நடத்தி போதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிக அளவில் மழை பெய்தபோதிலும், அமைச்சர்களும், அதிகாரிகளும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாகச் செயல்பட்டு, ஒரே இரவில் இயல்பு நிலையை மீட்டெடுத்தனர். இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்ற வானிலை கணிப்பு நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கின்றன.
சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவசர காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறையுடன் இணைந்து ஜெனரேட்டர் வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. போதிய ஆக்சிஜன் இருப்பும், ஆம்புலன்ஸ் சேவைகள் தடையின்றி இயங்கவும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்திற்குப் பிறகு வரக்கூடிய டெங்கு பாதிப்புகளைத் தடுக்க, நாட்டிலேயே முதன்முறையாக டெங்கு தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி இந்தியச் சூழலுக்கு பாதுகாப்பானதாகவும், திறம்படச் செயல்படக்கூடியதாகவும் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
மேலும், தமிழகத்தில் நிலவிய செவிலியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், காலியாக இருந்த 7,724 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டுள்ளன. முதலமைச்சர் தொடர்ந்து நேரடி அறிக்கைகளைப் பெற்று வழிகாட்டுதல் வழங்கி வருகிறார். பொதுமக்கள் எந்தவித இடர்பாடுகளும் இன்றி இந்த மழைக்காலத்தைச் சமாளிக்கும் வகையில், அரசு அனைத்துத் துறைகளின் சார்பிலும் முழு வீச்சில் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



