நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெத்தநாச்சி விநாயகர் கோவிலில் ஏராளமான குழந்தைகள் நெல்மணியில் ‘அ’ மற்றும் ‘அம்மா’ என்று எழுதி தங்களின் கல்வியைத் தொடங்கினர். நவராத்திரி பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளான விஜயதசமி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நாளில் தொடங்கும் கல்வி, கலைகள், பயிற்சிகள், தொழில் மற்றும் வணிகங்கள் தடையின்றி வெற்றிகரமாகத் தொடரும் என்பது ஐதீகம். இதனால், பலரும் தங்களது புதிய தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கிளைகளைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், விஜயதசமி நாளான இன்று தேனி பெத்தநாட்சி விநாயகர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிகாலையிலேயே வருகை தந்தனர்.

தொடர்ந்து, கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியையும், முதற்கடவுளான விநாயகரையும் தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் பூசாரி முன்னிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்துக் கொண்டு, பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ மற்றும் ‘அம்மா’ ஆகிய சொற்களைக் குழந்தையின் சுட்டுவிரலால் எழுதச் செய்து கல்வியைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையப் பிரார்த்தனை செய்யப்பட்டது.



