• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பேரிடர் காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தவெக அரசு பூர்த்தி செய்யுமா? ஆர்.பி.உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Oct 19, 2026

இன்றைக்கு சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழகத்தில் ஒருபுறம் விழாக்காலம் பூண்டிருக்கிற நேரத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வடகிழக்கு பருவமழை தொடங்கி, நமக்கு மழைப்பொழிவைக் கொடுக்கக்கூடிய காலமாகும்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி வலுவடைந்துவிட்ட சூழ்நிலையில், இன்னொரு புறம் மழைப்பொழிவின் அளவு குறித்த கணிப்புகள், எச்சரிக்கை அறிவிப்புகள் மாறிக்கொண்டே இருப்பதைப் பார்த்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. ஏனென்றால், எல்லா அறிவிப்புகளும் கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்பட்டவை என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தெரிவிக்கிறது.

கடைசி நேர மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து அரசு நிர்வாகம் செயல்பட வேண்டிய முக்கியமான தருணம் இது. பொதுவாக வடகிழக்கு பருவமழைதான் தமிழ்நாட்டுக்கு முக்கிய நீர் ஆதாரம். ஏறத்தாழ 45 சதவீத அளவு குடிநீருக்காகவும் விவசாயத்துக்காகவும் நமக்குப் பயன்படுகிறது.

மறுபுறம், காலநிலை மாற்றம் தொடர்பான அசாதாரண நிகழ்வுகளால் மழைப்பொழிவின் விகிதம் அதிகரித்து, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், பயிர்கள் மூழ்குதல் போன்ற பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகிறபோது, நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும். மருத்துவ உதவிகள் தயாராக இருக்க வேண்டும். உணவு வழங்க வேண்டும். அதேபோல, இழப்பீடுகளை அவர்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். இதையெல்லாம் அரசு செய்ய வேண்டும்; செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

ஆனால், முதன்முதலாக ஆட்சிக்கு வந்திருக்கிற முதல்வருக்கும் முன் அனுபவம் இல்லை; அரசுக்கும் முன் அனுபவம் இல்லை. ஆகவே, தவெக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்குக் கூடுதல் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

முதல்வர் தலைமையில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை வாரத்துக்கு ஒருமுறை அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை உறுதிப்படுத்தும்படி முதல்வர் கூறினார்.

அதுபோல, அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் ஒருங்கிணைக்கும் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் எனவும் கூறப்பட்டது. அக்டோபர் 15-ல் தனது தொகுதியான பெரம்பூரில், பேஷன் பாலம் அருகே மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். ஆனால், அவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் ஆய்வு செய்கிற பணிகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா?

ஏனென்றால், இந்த வடகிழக்கு பருவமழையில் அரசியல் செய்வதற்கு நேரமில்லை. மக்களுக்குப் பாதுகாப்பு என்பதுதான் மிக முக்கியமான நம்முடைய அவசியத் தேவை என்பதை அடிப்படையாகத்தான் இந்தக் கருத்தை நாம் முன்வைக்கின்றோம். முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் சொன்ன அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினத்திலிருந்து தமிழகம் பரவலாக அதிக மழையை எதிர்கொண்டு வந்தது. சென்னை ஒரு நாள் மழைக்குத் தத்தளித்த காட்சிகள் நம் தொலைக்காட்சியில் வெளியானது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்படுகிறது.

குறிப்பாக, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், சென்னைக்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அசாதாரணமான வானிலை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அரசின் நடவடிக்கைகள் துல்லியமாகத் தொடர வேண்டிய தருணம் இது. இதுதான் மக்களுடைய எதிர்பார்ப்பு.

ஏனென்றால், அறிவிப்பு கொடுப்பார்கள்; திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும். அது வலுவடையும். அது வலுவடைகிறபோது புயலாக மாறும். அந்தப் புயல் சூறைக்காற்றாகக்கூட மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இதெல்லாம் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள்.

வழக்கமான ஆயத்தப் பணிகள் குறித்த சுயமதிப்பீடும் அவசியம். தூர்வாரும் பணி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாகவும் சீராகவும் நடைபெறவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதுதான் நமது பிரச்சினைக்குக் காரணமாக அமையப்போகிறது.

இந்த ஐந்து மாதங்களில் அவர்கள் அதைச் செய்திருக்கலாம். அவர்கள் அக்கறை செலுத்தியிருந்தால், இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில் உதவியாக இருந்திருக்கும். ஏனென்றால், வடகிழக்கு பருவமழை என்பது ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடியது. ஆனால், தவெக அரசு அதைச் செய்யவில்லை. அதுதான் இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையப்போகிறது.

எடுத்துக்காட்டாக, 2021-ல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களும், 2024-ல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களும் புயலுடன் கூடிய பருவமழையால் இழப்புகளை எதிர்கொண்டன.

சென்னையோடு பிற கடலோர மாவட்டங்களும் முக்கியத்துவம் பெற வேண்டியது அவசியம். அதேபோன்று, நெல் கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் சேதமடையாமல் பாதுகாப்பதிலிருந்து மழைக்கால நோய்களை எதிர்கொள்வது வரைக்கும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். ஏன் அவசியம் என்று சொல்கிறோம்? இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோன்று, எல் நினோ நிகழ்வை ஒட்டி, பருவமழையின் அளவு குறைவாக இருப்பினும், குறுகிய கால இடைவெளியில் அதிக அளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

2027 கோடைக்காலம் வெப்பம் மிகுந்ததாக மட்டுமல்லாது, கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. இப்போது இருக்கக்கூடிய ஏரி, குளங்கள், கண்மாய்கள் இவற்றையெல்லாம் நாம் தூர்வாரியிருந்தால், தற்போதைய பருவமழையில் கிடைக்கக்கூடிய தண்ணீரைச் சேமித்து வைத்து, கோடைக்கால நெருக்கடிக்கு ஒரு தீர்வாக நிச்சயமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

இனிவரும் பருவமழைகள் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத்தான் தற்போதைய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தப் பருவமழையால், இன்றைக்குத் தமிழகத்தின் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதர 34 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக, கடந்த காலங்களில் தாழ்வான பகுதிகள் ஐந்து அடி, மூன்று அடி, இரண்டு அடி எனக் கண்டறியப்பட்டிருக்கும். தாழ்வான பகுதிகள் (லோ லைன் ஏரியா) கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் கூடுதலாக நாம் தயார் நிலையில் இருப்பது வழக்கமான ஆயத்தப் பணி. அது இந்த முறை செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரம் தெரியவில்லை. எல்லா மாவட்டங்களிலும் அந்தப் புள்ளிவிவரம் இருக்கும். அதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இயற்கைப் பேரிடரைத் தவிர்க்க முடியாது; தடுக்க முடியாது. ஆனால், அதை உயிரிழப்பு இல்லாமல், உயிர்ச் சேதம் இல்லாமல் பாதுகாப்பாக எதிர்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன் அனுபவம் இல்லாத தவெக அரசு மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ஆகவே, வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் தொய்வின்றித் தொடர்வதற்கு உரிய ஆய்வுப் பணிகளையும் உரிய உத்தரவுகளையும் முதல்வர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அப்போதுதான் பொருள் சேதம், உயிர்ச் சேதம், கால்நடைகள் சேதம், பயிர்ச் சேதம் இல்லாமல் பாதுகாப்பாக இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்பதுதான் மக்களுடைய எதிர்பார்ப்பு.

மக்களுடைய எதிர்பார்ப்பு ஏற்கெனவே எந்த நிலையில் இருக்கிறது? தவெக அரசு அதை எப்படி அணுகுகிறது, எப்படி கையாளுகிறது என்பது நமக்குத் தெரியும்.

இந்தப் பேரிடர் காலங்களில் தவெக அரசு மக்களுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் அதிரடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வருமா?