• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

டெங்கு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..,

ByKalamegam Viswanathan

Sep 20, 2026

வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் இச்சூழலில், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய மலேரியா, டெங்கு, காலரா, தொண்டை வலி, இருமல் மற்றும் சளி போன்ற தொற்றுநோய்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறையின் சார்பில் விரிவான முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சல் பரவும் விதம் & விழிப்புணர்வு

வைரஸ் தொற்று:

டெங்கு என்பது வைரஸ் கிருமியால் உருவாகும் தீவிரக் காய்ச்சலாகும்.

ஏடிஸ் கொசுக்கள்:

வீடுகள், பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் தேங்கி நிற்கும் நன்னீரில் உற்பத்தியாகும் ‘ஏடிஸ்’ (Aedes) வகை கொசுக்கள் மூலம் இந்நோய் பரவுகிறது.

இனப்பெருக்கம்:

பயன்பாடற்ற டயர்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் நீண்ட நாட்களாகக் கழுவப்படாத நீர் சேமிப்புத் தொட்டிகளில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. சுமார் 3 வாரங்கள் வரை உயிர்வாழும் ஒரு கொசு நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான கொசுக்களாக உற்பத்தியாகிறது.

பரவுதல்:

டெங்கு பாதித்த ஒருவரைக் கடிக்கும் ஏடிஸ் கொசு, ஆரோக்கியமான மற்றொருவரைக் கடிக்கும் போது இந்நோய் வேகமாகப் பரவுகிறது.

தினசரி 100 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட சிறப்பு மருத்துவ முகாம்கள் (டிசம்பர் 30 வரை)

பருவமழைக்கால நோய்களைக் கட்டுப்படுத்தவும் துரித சிகிச்சை அளிக்கவும் பின்வரும் விரிவான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:

நடமாடும் மருத்துவக் குழுக்கள்:

14 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக தினந்தோறும் 42 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

பள்ளி குழந்தைகள் நலவாழ்வுத் திட்டம்:

ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் அடங்கிய 29 மருத்துவக் குழுக்கள் மூலமாக நாள்தோறும் 58 பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினசரி முகாம்கள்:

மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 100 இடங்களில்(அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட) ரத்தப் பரிசோதனை வசதியுடன் கூடிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தொடர் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.

காலக்கெடு:

இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் களப்பணிகள் & தடுப்பு நடவடிக்கைகள்

அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் தேவையான அளவு கொசுப்புழு ஒழிப்பு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு, காய்ச்சல் கண்ட இடங்களில் தொடர்ந்து புகை மருந்து (Fogging) அடிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம் & தூய்மைப் பணிகள்:

சாக்கடைகளைத் தூர்வாருதல், தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறைப்படி தூய்மைப்படுத்தி குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகித்தல் மற்றும் குடிநீர் குழாய் கசிவுகளை சரிசெய்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பள்ளிகள் & பொது இடங்கள்:

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள், தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

24 மணி நேர காய்ச்சல் பிரிவு:

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கும் வகையில் காய்ச்சல் சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த சிகிச்சையுடன், நீர்ச்சத்து குறைபாட்டைச் சரிசெய்ய ஓ.ஆர்.எஸ் (ORS) கரைசல் மற்றும் நிலவேம்பு குடிநீர் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

சுய மருத்துவம் தவிர்க்கவும்:

காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதைத் (Self-medication) தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சிறப்பு முகாம்களை அணுகி தகுந்த ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.

முகக்கவசம் அணிதல்:

நோய் தொற்று மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கப் பொதுமக்கள் அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் உள்ள நபர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது.

அபராத எச்சரிக்கை:

வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் வளரும் வகையில் அலட்சியமாக வைத்திருப்பது கண்டறியப்பட்டால், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் (Tamil Nadu Public Health Act) நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.