மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது.

இந்த நிலையில் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள சனீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று கனமழை காரணமாக சாலையின் நடுவே சாய்ந்தது. இதனால் சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை திருமங்கலம் விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் சாலையில் விழுந்த மரம் எதிரே இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்ததில் மரத்தின் அருகே பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த மரத்தின் கீழே சோழவந்தான் பகுதியில் வாடகை கார் வைத்துள்ளவர்கள் கார் ஸ்டாண்ட் அமைத்துள்ளனர். மரத்தின் கீழே எப்போதும் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து தங்கள் அன்றாட பணிகளை செய்து வந்த நிலையில் மழை காரணமாக அந்த நேரத்தில் யாரும் அந்த இடத்தில் இல்லாதது உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த வாரம் வரை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த வேண்டும். முக்கியமாக மின்கம்பங்கள் மீது மர கிளைகள் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஆகையால் உடனடியாக மரத்தின் கிளைகளை வெட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக அந்த பெரிய மரம் சாலையில் விழுந்துள்ளது.

இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டது. சோழவந்தான் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நிலையில் சாலையில் அருகில் இருந்த மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக இந்த பகுதி பொதுமக்கள் கூறிச் சென்றனர்.








