• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!

BySeenu

Sep 10, 2026

கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகப் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். போதுமான பாதுகாப்பு எச்சரிக்கைக் பலகைகளோ அல்லது தடுப்புகளோ முறையாக அமைக்கப்படாததால், எதிர்பாராத விதமாக அந்த இளம் பெண் தனது இருசக்கர வாகனத்துடன் சாலையில் தோண்டப்பட்டு இருந்த ஆழமான பாதாள சாக்கடை குழிக்குள் தலைகுப்புற விழுந்தார்.

திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழிக்குள் விழுந்த இளம் பெண் வெளியே வர முடியாமல் தவித்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், மீட்புப் பணியாளர்களும் உடனடியாக அங்குத் திரண்டனர்.
​தொடர்ந்து, அருகில் அந்தப் பணிக்காக நின்று இருந்த ஜேசிபி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

நல்வாய்ப்பாகப் பெரிய காயங்கள் ஏதுமின்றி அப்பெண் உயிர் தப்பினார்.

நகரின் முக்கியப் பகுதியான மருதமலை சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, ஒளிரும் பட்டைகளோ இன்றி ஆபத்தான முறையில் தோண்டப்பட்டு உள்ள குழிகளால் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

​இரவு நேரங்களில் இதுபோன்று குழிகள் தெரிவதில்லை எனவும், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணம் எனவும் கூறி அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் ஆத்திரம் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.