மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் நிரபராதியை கைது செய்த காவல்துறையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் ஒரு லாக் அப் மரணம் நடைபெறாமல் முதல்வர் தடுக்கவும் தனது மகனை கண்ணில் காண்பிக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி கல்லாங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அன்று இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பந்தமாக கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் முத்தையா என்பவரை காடுபட்டி காவல்துறையினர் கைது செய்த நிலையில் கைது செய்யப்பட்ட முத்தையாவுக்கும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் குற்றவாளிகள் யார் என காவல் துறையினருக்கு தெரிந்தும் அரசியல் தலையீடு காரணமாக குற்றவாளிகளை கைது செய்யாமல் குற்றம் செய்யாத நபர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறியும் தனது மகனை கண்ணில் காண்பிக்க வேண்டும் எனவும் மடப்புரம் காவாலாளி அஜீத் குமார் மரணம் போல் மற்றொரு சம்பவம நடைபெறாமல் இருக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்தும் கல்லாங்காடு பகுதி பொதுமக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலை நேரம் என்பதால் பள்ளி குழந்தைகள் அன்றாட பணிகளுக்கு செல்வோர் சாலை மறியலால் கடும் அவதி அடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேண்டும் மாவட்ட கண்காணிப்பாளர் வரவேண்டும் என கோரிக்கை வைத்து தொடர் கோஷங்களை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இரண்டு மணி நேரம் கழித்து வந்த சோழவந்தான் ஆய்வாளர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை செப்டம்பர் 11ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு பணிக்காக செல்ல வேண்டி இருப்பதாக கூறிய ஆய்வாளர் இரண்டு நாட்கள் கழித்து குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் அவ்வாறு கைது செய்யவில்லை என்றால் மீண்டும் மறியல் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் எனவும் காவல் ஆய்வாளர் கூறியதாக சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். பேச்சுவார்த்தை முடிவில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முத்தையாவின் தந்தை ஆறுமுகம் கூறுகையில் இரண்டு நாட்களுக்குள் தனது மகன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினரே பொறுப்பு எனவும் கூறினார். மன்னாடிமங்கலம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பொது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றங்கள் நடப்பதற்கு முன்பு தடுக்க வேண்டும். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். பழங்குடியின மக்களின் இரண்டு மணி நேர சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் சென்றனர்.








