கோவை, துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் மெதுவாக நுழைந்தது.
யானை தெருவுக்குள் வருவதைக் கண்ட அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து பலத்த சத்தத்துடன் குரைக்கத் தொடங்கின.

இதனை அடுத்து ஒற்றை யானை சிறிது நேரம் அங்கு இருந்த மரங்கள் மற்றும் வீடுகளின் அருகே உணவைத் தேடி நின்று கொண்டு இருந்த அந்த யானை, பின்னர் மெதுவாக அங்கு இருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கிச் சென்றது.
கதிர் நாயக்கன்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்து வருகின்றனர்.




